ராணிப்பேட்டை:
தமிழ்நாட்டில் மீண்டும் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசைச் சாடி உள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று மாவட்ட கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கலந்து கொண்டார். இந்த தேர்தலில் சட்டமன்ற துணை கொறடா சு.ரவி மீண்டும் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெயக்குமார் அட்டாக்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு விவகாரங்களில் திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். சமீபத்தில் மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அதேபோல தமிழ்நாட்டில் சில நாட்களாகவே பல இடங்களில் மின்வெட்டு ஏற்படுவதாகப் புகார் எழுந்ததுள்ளது. இது தொடர்பாகவும் திமுக அரசை ஜெயக்குமார் கிண்டல் செய்யும் வகையில் பேசியுள்ளார்.
ஆளுநர் கான்வாய் விவகாரம்
ஆளுநர் கான்வாய் விவகாரம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த ஜெயக்குமார், “தமிழக அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறது. மேலும் தமிழகத்தில் ஆளுநருக்கே போதிய பாதுகாப்பு இல்லை என்ற நிலையே இருக்கிறது. இப்படி இருக்கும் போது, சாதாரண பொதுமக்களுக்கு எந்த விதத்தில் பாதுகாப்பு இருக்கும். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் என்பது சுத்தமாக இல்லை” என்றார்.
வேலையைக் காட்டும் அணில்
மின்வெட்டு புகார் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜெயக்குமார், “தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் அணில் தன் வேலையைக் காட்டுகிறது என நினைக்கிறேன். அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாகத் திகழ்ந்தது. ஆனால் தற்போது பெரும்பான்மையான மாவட்டத்தில் 3 மணி முதல் 5 மணி நேரம் வரை மின் நிறுத்தம் உள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்” என்று சாடினார்.
திமுக மீது அட்டாக்
தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அகில இந்திய அரசியலுக்குச் செல்ல முயல்கிறாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஜெயக்குமார், “முதலில் கூரை மீது ஏறி கோழியைப் பிடிக்கச் சொல்லுங்கள். பிறகு வானம் மீது ஏறி வைகுண்டத்தைப் பார்க்கலாம். தமிழகத்தில் இந்தியை எந்த வகையிலும் ஏற்பதில்லை. இந்தியை எதிர்ப்பதாகக் கூறி விட்டு, முதலமைச்சரின் 110 ஸ்டேட்மெண்டில் பல திட்டங்கள் இந்தியில் வெளிப்படையாக ஆன்லைனில் வெளியிடுகின்றனர். மும்மொழிக் கொள்கையை அமல்படுத்திவிட்டு, தமிழக மக்களிடம் இரட்டை வேடத்தில் போடுகிறார்கள்” என்று விமர்சித்தார்.
அணில்
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு, ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. அப்போது இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் விளக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அணில்கள் மின் கம்பிகளில் ஓடும்போது ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு, மின் தடை ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. இருப்பினும், அமைச்சரின் இந்த பேச்சு இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours