கஞ்சா விற்பனை செய்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் 2 போலீஸ்காரர்கள் கைது..!

Estimated read time 1 min read

சென்னை:

சென்னை முகப்பேர் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் திலீப்குமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் சிறப்பு தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீஸார் திலீப்குமார் தொடர்புடைய இடத்தில் அதிரடி சோதனை நடத்தி 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதில் திலீப் குமார் உரிமை இல்லாமல் ஸ்பா நடத்தியதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் திலீப் குமாரிடம் கஞ்சா எங்கு விற்பனை செய்யப்படுகிறது? யாரிடம் இருந்து கஞ்சா வருகிறது? என்பது குறித்து நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அதில், அயனாவரத்தில் ரயில்வே குடியிருப்புகளுக்கு அருகே கான்ஸ்டபிள் சாலை பகுதியில் உள்ள காலி இடங்களில் கஞ்சா விற்பனை செய்வதும், கோடு சொன்னால் மட்டுமே கஞ்சா வாங்க முடியும் என தெரியவந்தது.

கஞ்சா வாங்க வரும் நபர்கள் கஞ்சா சப்ளை செய்யும் நபர்களை தொடர்பு கொள்ளும்போது அவர்களுக்கு கோர்டு வேர்ட் ஒன்று சொல்லப்படும். அந்த கோர்டு வேர்டை சொன்னால் மட்டுமே கஞ்சா வழங்கப்படும், போலீஸாரிடம் சிக்காமல் கஞ்சா விற்பனை செய்யவே இந்த யுக்தியை கஞ்சா வியாபாரிகள் கையாளுகின்றனர்.

வேலையில்லாத மற்றும் சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் 11 பொட்டலங்கள் விற்பனை செய்ய கொடுக்கப்படும். அதில் 10 பொட்டலங்களுக்கான காசை விற்பனை செய்து கொடுத்துவிட்டு ஒரு பொட்டலம் விற்ற காசை சம்பளமாக வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இவ்வாறு பல கும்பல்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கஞ்சாவை சப்ளை செய்பவர்கள் யார் என்பது குறித்த விசாரணை மேற்கொண்டதில் ரயில்வே காவல் துறையில் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வரும் சக்திவேலன் மற்றும் தமிழக சைபர் க்ரைம் டிஜிபி அம்ரேஷ் புஜாரி அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவலர் செல்வகுமார் ஆகிய இருவர் கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது.

கைதான திலீப் குமாரின் தந்தை முத்துக்குமார் 2016-ம் ஆண்டு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தபோது உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கருணை அடிப்படையில் திலீப் குமாரின் சகோதரர் தண்டபாணிக்கு உதவி ஆய்வாளர் பணி கிடைத்துள்ளது. ரயில்வே காவல் துறையில் பணியாற்றி வரும் தண்டபாணி ஓட்டேரி பனந்தோப்பு காலனி ரயில்வே குடியிருப்பு பகுதியில் வசித்து வந்துள்ளார்.

ரயில்வே குடியிருப்பில் சகோதரரை சந்திக்க வந்த திலீப் குமாருக்கு காவலர்கள் செல்வகுமார் மற்றும் சக்திவேல் ஆகியோரது நட்பு கிடைத்துள்ளது. பின்னர் காவலர்கள் இருவரும் சேர்ந்து தங்களிடம் கஞ்சா இருப்பதாகவும் அதனை விற்பனை செய்து தருமாறு திலீப் குமாரிடம் கேட்டதன் பேரில் வழக்கறிஞர் கோபால் என்பவர் மூலம் கஞ்சாவை விற்க முயற்சி மேற்கொண்டனர். பின்னர் காவலர் செல்வகுமாரிடம் கஞ்சாவை திலீப் குமார் வாங்கியுள்ளார். செந்தில் குமாருக்கு காவலர் சக்திவேலன் கஞ்சாவை சப்ளை செய்தது தெரியவந்தது.

காவலர் சக்திவேலுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்து என்பது குறித்த விசாரணையில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி ஆந்திராவில் இருந்து ரயிலில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த கஞ்சாவில் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் காவலர் சக்திவேலன் திருடி கொண்டு வந்து, காவலர் செல்வகுமாரிடம் கொடுத்து பின்னர் ரியல் எஸ்டேட் அதிபர் திலீப்குமார் மூலமாக விற்க முயன்றது தெரிய வந்துள்ளது.

மேலும் இரண்டு காவலர்கள் சேர்ந்து ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்த கஞ்சாவில் எவ்வளவு திருடி விற்பனை செய்துள்ளனர் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திலிப்குமாரின் சகோதரரான உதவி ஆய்வாளர் தண்டபாணிக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஒருபுறம் கஞ்சாவை ஒழிக்க காவல்துறை அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மற்றொருபுரம் காவலர்களே கஞ்சா வியாபாரியுடன் சேர்ந்து கஞ்சா விற்று வரும் சம்பவம் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours