குமரி. எஸ்பி அலுவலக வளாகத்தின் உள்ளேயே 5 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றப்பிரிவு டிஎஸ்பி..! அதிரடி கைது..!!

Estimated read time 1 min read

குமரி:

குமரி. எஸ்பி அலுவலக வளாகத்தின் உள்ளேயே ரூபாய் 5 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றப்பிரிவு டிஎஸ்பி லஞ்ச ஒழிப்பு பிரிவால் அதிரடி கைது.

லஞ்சத்தை வளரவிட்ட முன்னாள் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி மதியழகன்.

புதிய லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி “லஞ்சத்தை வேரறுக்க வந்த புது அவதாரம்” – என பொதுமக்கள் பாராட்டு.

தமிழகத்திலேயே லஞ்சம் கொழிக்கும் மாவட்டமாக குமரி மாவட்டம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறது. குமரி மாவட்டத்தில் பணியிட மாற்றம் பெற்று வரும் அனைத்து துறை அதிகாரிகளும் குமரி மாவட்டத்தை விட்டு செல்லாமல் குமரி மாவட்டத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வரும் கேலிக்கூத்துகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. நேர்மையான அதிகாரிகள் பலர் குமரி மாவட்டத்திற்கு வந்தாலும் அவர்களில் சிலர் கூட லஞ்சத்தில் உருண்டு புரண்டு தங்கள் வாழ்க்கையை லஞ்சத்தில் அர்ப்பணித்து வாழ்ந்து விடுவது இயற்கையாகவே அமைந்துவிடுகிறது. அனைத்து வித சட்ட விரோத கடத்தல்களின் சொர்க்கமாக குமரி மாவட்டம் கடந்த சில வருடங்களாகவே திகழ்ந்து வருகிறது. கனிம வள கடத்தல்களில் தமிழகத்திலேயே முதல் இடம் வகிக்கும் மாவட்டம் குமரிமாவட்டம். கனிம வள கடத்தல் மாபியா கும்பல்களிடம் இருந்து அரசியல் வாதிகள் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்குவதால் தான் குமரி மாவட்டம் வழியே அதிகளவு கனிமவள கடத்தல் உட்பட அனைத்து விதமான கடத்தல்களும் நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள கடத்தல் லாரிகள் சோதனைச் சாவடிகளை சொர்க்கவாசல் களாகவே கடந்து செல்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. குமரி மாவட்டத்திலேயே மிக முக்கிய காவல் உட்கோட்டமான தக்கலை காவல் உட்கோட்டம் கூட ஏஎஸ்பி அல்லது நேரடி டிஎஸ்பி என்றபணி இடத்திலிருந்து ஏற்கனவே பணி மாறுதலில் சென்ற எஸ் பி யின் தயவால் தக்கலை காவல் உட்கோட்ட பணியிடம் தரம் இறக்கப்பட்டு பதவி உயர்வில் வரும் டிஎஸ்பி பணியிடமாக மாற்றப்பட்டு பதவி உயர்வில் வந்த டிஎஸ்பி பணியிடமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் குமரி மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக தங்கவேல் என்பவர் பணிபுரிந்து வந்தார்.

நில மோசடி தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு ஆகியவைகளில் பெருமளவு லஞ்சம் புரள்வதால் பலரும் போட்டி போட்டுக்கொண்டு முக்கிய பிரிவுகளை தக்க வைத்துக் கொள்வது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் தற்போது நில தகராறு சம்பந்தமான வழக்கில் அந்த வழக்கை முடித்து தர நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் பகுதியை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகன் சிவ குற்றாலம் என்பவரிடமிருந்து ஐந்து லட்ச ரூபாய் கட்டாயப்படுத்தி மிரட்டி லஞ்சம் பெற்ற டிஎஸ்பி தங்கவேல் ரூபாய் 5 லட்சம் லஞ்சப் பணத்தை பெறும் போது கையும் களவுமாக குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரால் எஸ்பி அலுவலக வளாகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். தற்போது புதிய எஸ்பி பதவி ஏற்கும் முன்னர் குமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் போலீசார் பெருமளவில் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது உண்டு. ஆனால் அந்த எஸ் பி பணியிட மாற்றத்தில் சென்றுவிட்டார். அதன் பின்னர் தற்போது புதிய எஸ் பி பதவியேற்று ஒரு சில நாட்கள் மட்டுமே ஆனது.

மாவட்டத்தில் எஸ்பி மட்டுமே மாற்றப்பட்டாரே ஒழிய பல லஞ்சப் பெருச்சாளிகள் மாற்றப்படாமல் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் பணியில் குத்தகை பணியிடமாக மாற்றி ஒட்டிக் கொண்டே உள்ளனர். சமீபத்தில் மாவட்ட எஸ்பி மாற்றப்பட்டபோது கூட ஏனைய நேர்மையற்ற அதிகாரிகளையும் மாற்றியிருந்தால் தற்போது லஞ்சம் வாங்கி டிஎஸ்பி ஒருவர் சிக்கிய அவலம் நேர்ந்திருக்காது. கீழ்மட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி வாங்கி கொள்வது வழக்கம். அதேபோல பல்வேறு பணியிடங்களுக்கு குமரி மாவட்டத்தில் போட்டிகளும் அதிகம். குறிப்பாக கடந்த காலத்தில் தக்கலை டிஎஸ்பி பணியிடத்திற்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து அந்த பணியிடத்திற்கு வந்ததாகவும் இந்நிலையில் திடீரென தன்னை நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும் இங்கிருந்து பணியிடமாற்றத்தில் சென்ற அதிகாரி ஒருவர் மிகவும் கவலையுடன் கூறியதாக அப்போது தகவல்கள் வெளியானது. அவ்வாறு குமரி மாவட்டத்தில் பணிபுரிய காவல்துறை உட்பட பல்வேறு துறைகளில் உள்ள பலரும் பெரும் போட்டியில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தக்கலை காவல் நிலையத்தில் தற்போது பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் சுதேசன் 2008ஆம் ஆண்டு முதல் குமரி மாவட்டத்திலேயே பணியாற்றிவருகிறார்.

இடையில் ஒன்றிரண்டு ஆண்டுகளை தவிர குமரி மாவட்டத்தில் பல காவல் நிலையங்களிலும் பணியாற்றிவிட்டு குறிப்பாக எஸ்பி தனிப்பிரிவு ஆய்வாளராகவும் பணியாற்றிவிட்டு தற்போது மீண்டும் இரண்டாம் முறையாக தக்கலை காவல் நிலையத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அதேபோல கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணியம்மாள் உதவி ஆய்வாளராக குமரிமாவட்டத்தில் பணியாற்றிவிட்டு இடையே தேர்தலுக்காக வெளியே சென்றதை தவிர மீண்டும் குமரிமாவட்டத்தில் வந்து தனது கணவரின் சொந்த மாவட்டமான குமரி மாவட்டத்திலேயே தொடர்ந்துபணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது உயரதிகாரிகளின் உடந்தையோடு மட்டுமே இயலும் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்றே தோன்றுகிறது. பணியிட வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டு உள்ளவாறு தமிழக காவல்துறையில் இதுவரை பணியிட மாற்றங்களை செயல்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தமிழக டிஜிபியாக பதவி ஏற்றவுடன் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் பணியிட வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பணியிட மாறுதல்களை செய்வார் என்று எதிர்பார்த்த நிலைக்கு மாறாக, பணியிட வழிகாட்டி நெறிமுறைகளுக்கு முரணாகவே தொடர்ந்து பணியிட மாறுதல்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. சாதாரணமாக ஒரு காவல் ஆய்வாளர் மூன்று வருடங்கள் ஒரு மாவட்டத்தில் பணிபுரிய வேண்டும். அதேபோல ஒரு டிஎஸ்பி ஒரு மாவட்டத்தில் குறைந்தபட்சம் 2 வருடங்கள் பணி புரிய வேண்டும். மேலும் சென்சிட்டிவ் மாவட்டங்களில் பணி புரிந்திருக்க வேண்டும் என்பதற்கு முரணாக ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதால் தொடர்ந்து 10 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிய அனுமதிக்கப்பட்டு உள்ளதால் இதுபோன்று லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்பு பிரிவிடம் சிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

அதுமட்டுமின்றி திருமண பந்தத்தால் குமரி மாவட்டத்தை சொந்த வசிப்பிடமாக கொண்டவர்கள் குமரி மாவட்டத்திலேயே பணியாற்றி வரும் அவலமும் தொடர்கதையாகவே உள்ளது. காவல் ஆய்வாளர்கள் முதல் டிஎஸ்பி பணியிடம் வரை குமரி மாவட்டத்தில் தற்போது சொந்த வசிப்பிடமாக கொண்டவர்கள் பலரும் பணியாற்றி வருகின்றனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த ஒரு சில வருடங்களாக குமரி லஞ்ச ஒழிப்பு பிரிவே லஞ்சத்தில் மூழ்கி இருந்த நிலையில் அதில் முக்கியமாக அப்போது லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பியாக பணி புரிந்த மதியழகன் என்ற டிஎஸ்பி யை மட்டும் லஞ்ச ஒழிப்பு துறை குமரி மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்தது. ஆனால் டிஎஸ்பி மதியழகன் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் தனது நண்பர்கள் மூலம் சில மாதங்களிலேயே மீண்டும் தென் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் பெற்று வந்து தனது வீட்டில் சொந்த வேலைகளை பார்த்துவிட்டு தற்போது நிம்மதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. டிஎஸ்பி மதியழகன் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணிபுரிந்தபோது லஞ்சம் மற்றும் ஊழலை சிக்கிய பல குற்றவாளிகளை விடுவிக்க சட்டவிரோதமான நடைமுறைகளைப் பின்பற்றிய சம்பவங்களும் வெளிவந்தது. குறிப்பாக முக்கிய குற்றவாளியை கூட லஞ்ச ஒழிப்பு வழக்கில் இருந்து விடுவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிஎஸ்பி மதியழகன் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணியாற்றியபோது முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் லஞ்சப் பேர்வழிகளான பலஅதிகாரிகள் அப்போதே கைது ஆகி இருப்பார்கள்.

அல்லது லஞ்ச ஒழிப்பு பிரிவு வழக்கில் சிக்கி இருப்பார்கள். ஆனால் டிஎஸ்பி மதியழகன் லஞ்ச பேர் வழிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதால் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அப்போது செயலிழந்ததுமன்றி தன்மானத்தையும் கூட இழந்து இருந்தது. டிஎஸ்பி மதியழகனை குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் இருந்து பணியிட மாற்றம் செய்த பின்னர் புதிய டிஎஸ்பியாக பீட்டர் பால் என்பவர் பதவியேற்ற பின்னர் குமரி மாவட்டத்தில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு பிரிவு பல்வேறு அதிரடி லஞ்ச ஒழிப்பு சோதனைகளை நடத்தி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு எமனாக புத்துணர்வுடன் செயல்பட்டு வருகிறது. குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ஆக பணிபுரிந்த மதியழகன் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டுகொள்ளாமல் விட்டுச்சென்றவர்களையும் அடையாளம் கண்டு தற்போது குமரி மாவட்டத்தில் புதிய லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கைது செய்து நடவடிக்கை எடுத்து வருவது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை லஞ்ச ஒழிப்புத்துறை பெற்று உள்ளது.

தமிழக காவல்துறை உயரதிகாரிகள் குமரி மாவட்டத்தில் பல ஆண்டு காலமாக பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் திருமண பந்தத்தால் குமரி மாவட்டத்தை தற்போது சொந்த மாவட்டமாக கொண்டவர்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக குமரி மாவட்டத்திலேயே வசித்துவரும் காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து சுழற்சி முறையில் தமிழகத்தின் ஏனைய பகுதியில் உள்ள அதிகாரிகளை குமரி மாவட்டத்தில் பணி அமர்த்தினால் அன்றி குமரி மாவட்டத்தில் பாய்ந்தோடும் லஞ்சத்தை ஒழிக்க முடியாது என்பதே சமூக ஆர்வலர்களின் கூற்றாக உள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours