சேலம்:
பலாப்பழம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பண்ருட்டி. இந்த பலாவிற்கு என்று தனி சுவை உண்டு. தமிழகம் முழுவதும் பலாப் பழம் விளைந்தாலும், பண்ருட்டியில் பலாவிற்கு என்று மார்க்கெட்டில் தனி இடம் உண்டு.
அதற்கு காரணம் அதன் அலாதியான சுவை. பண்ருட்டி பகுதியில் உள்ள மண்வளம், தட்ப வெப்ப நிலை ஆகியவை பலாப்பழம் வளமாகவும், சுவையாகவும் இருப்பதற்கு காரணம்.
செம்மண் பூமியான பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் பலா மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் தான் பலாப்பழ சீசன்களை கட்டும்.
இங்கு விளையும் பழங்கள் தமிழகத்தில் குறிப்பாக சேலம், சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களுக்கும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது. தற்போது பலாப்பழம் சீசன் என்பதால் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினமும் 2 அல்லது 3 லாரிகளில் பலாப்பழம் சேலம் சத்திரம் மார்க்கெட் டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த பழம் சராசரியாக 5 கிலோ முதல் 17 கிலோ வரை எடை உள்ளது. கிலோ ரூ. 20 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி பெரிய பலாப் பழம் ரூ. 150 முதல் ரூ. 250 வரை விற்பனையாகிறது.
இதேபோல் தள்ளு வண்டி கடைக் காரர்கள், பழக் கடைக்காரர்கள் ஒரே நேரத்தில் 5 முதல் 10 பழங்கள் வரை சில்லரை விற்பனைக்கு வாங்கி செல் கின்றனர். இதனால் சேலத் தில் பலாப்பழம் விற்பனை சூடு பிடித்துள்ளது.
+ There are no comments
Add yours