சேலம்:
ஓமலூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ‘ஸ்பீடு ரேடார் கண் கருவி’ எனப்படும் தானியங்கி அபராதம் விதிக்கும் கருவி மூலம், அதி வேகமாக செல்லும் வாகனங்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதை ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறும்போது, ‘ தேசிய நெடுஞ்சாலைகளில் பஸ், லாரி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. அதன்படி விதிமுறைகளை மீறி அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை ‘ஸ்பீடு ரேடார் கண்’ கருவி மூலம் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதற்கான குறுஞ்செய்தி செல்லும். அபராத தொகையை கோர்ட்டு அல்லது ஆன்லைன் மூலம் கட்ட வேண்டும். சேலம் மாவட்டத்தில் ரூ. 16 லட்சத்தில் 2 கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகளை தினமும் வெவ்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரம் பொருத்தி கண்காணிக்கப்படும். இதன் மூலம் விபத்துக்கள் குறைக்கப்படும்’ என்றார்.
இந்த திட்ட தொடக்க நிகழ்ச்சியில், ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours