சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளம் பகுதியில் பிணமாக கிடந்தாா். அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைதானார்கள். இதில் ஒருவர் தலைமறைவாக உள்ளார். இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணு பிரியா தற்கொலை செய்த சம்பவத்துக்கு பின்னர், இந்த வழக்கு மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் தனது மகன் கொல்லப்பட்ட வழக்கை உள்ளூர் கோர்ட்டில் விசாரித்தால் சாட்சிகள் கலைக்கப்படலாம். வழக்கின் திசை மாற்றப்படலாம் என்றும், எனவே வேறு மாவட்ட கோர்ட்டுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என கோகுல்ராஜ் தாயார் சித்ரா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதன் அடிப்படையில் கோகுல்ராஜ் கொலை வழக்கை, மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கு மதுரை சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து கடந்த மாதம் உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கில் நீதிபதி சம்பத்குமாா் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தார். இதில், குற்றம் சாட்டப்பட்டவர்களான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண், குமார் மற்றும் சதீஷ் குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் கைதான சங்கர், அருள்செந்தில், செல்வகுமார் தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரை விடுதலை செய்வதாகவும் நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கின் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 10 பேருக்கு விதித்துள்ள தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.
அதன் முழு விவரம் வருமாறு;-
இன்று பிற்பகலில் தண்டனை விவரத்தை அறிவிப்பதாக நீதிபதி சம்பத் குமார் அறிவித்திருந்தார். அதன்படி, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ், அருண், குமார் உள்ளிட்ட 10 பேருக்கு தண்டனை விவரத்தை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் வழங்கினார்.
இதில், யுவராஜ் மற்றும் அருண் ஆகிய இருவருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது சாகும் வரையில் சிறை தண்டணை அளிக்கப்பட்டுள்ளது.
குமார், சதிஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவருக்கும், குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்தால் ஆயுள் மற்றும் கூடுதலாக 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours