உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!

Estimated read time 1 min read

சென்னை:

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர் உச்சத்தில் இருக்கின்ற இந்தத் தருணத்தில், ரஷ்ய நாட்டு இராணுவம் உக்ரைன் நாட்டிற்குள் புகுந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியும், குண்டுமழை பொழிந்தும் வருகின்றது. இந்த நிலையில், அங்குள்ள இந்திய மக்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தாயகம் திரும்ப முடியாமல்  சுரங்கப் பாதைகளில் பதுங்கி உள்ளதாகவும், உணவின்றி தவித்து வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை பத்திரமாக தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் அவர்கள் எடுத்து வருவதோடு, இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ரஷ்ய நாட்டு அதிபருடன் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், ரஷ்ய நாட்டு அதிபரும் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், அவர்களை அழைத்து வர தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வந்தாலும், உக்ரைன் நாட்டில் கேட்கும் தொடர் குண்டு சப்தங்களைக் கேட்டு அங்குள்ள இந்தியர்கள் கடும் பீதியடைந்துள்ளனர். அவர்களிடத்தில் பேரச்சம் நிலவுகிறது.

உக்ரைன் நாட்டு வான்வழி மூடப்பட்டிருப்பதையடுத்து, அதன் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலாந்து, சுலோவாகியா ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளில் இந்தியத் தூதரகம் சோதனை முகாம்களை அமைத்து, அந்த முகாம்களுக்கு சாலை மார்க்கமாக வருமாறு இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவ்வாறு வரும்போது, இந்திய தேசியக் கொடியை பேருந்துகளில் ஒட்ட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது. உக்ரைன் நாட்டில் போர் நடைபெற்று வருவதையடுத்து அங்கு இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால், வாகனப் போக்குவரத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், இந்திய தூதரகத்தின் அனுமதியோ அல்லது உள்நாட்டு அனுமதியோ இல்லாமல், வாடகைப் பேருந்துகள் மூலம் பத்து மணி நேரம், 12 மணி நேரம் பயணித்து இந்திய மாணவ, மாணவியர் உக்ரைன் நாட்டு எல்லைக்கு செல்வதாகவும், இது மிகவும் ஆபத்தானது என்றும், இருந்தாலும் வேறுவழியின்றி அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. போர் நடைபெறுகின்ற நாட்டில் இவ்வாறு பத்து மணி நேரம், 12 மணி நேரம் சாலையில் பயணிக்கும்போது, நடுவில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.  அவர்களது உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.

உக்ரைன் நாட்டில் 16,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாகவும், இவர்களில் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்ற நிலையில், உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலாந்து, சுலோவாகியா ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ள மத்திய அரசு, உக்ரைன் நாட்டிலிருந்து அதன் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்திய மக்கள், குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால், பாதுகாப்பின்மை என்பது உக்ரைன் நாட்டில்தான் இருக்கிறது.

உக்ரைன் நாட்டை விட்டு வெளியே வந்தபிறகு அவர்களது பாதுகாப்பு என்பது ஓரளவு உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான். எனவே, உக்ரைன் நாட்டிலிருக்கும் இந்தியர்களை அங்கிருந்து அண்டை மாநிலங்களின் எல்லைப் பகுதிகளுக்கு பாதுகாப்பாக அழைத்து வருவதும், அங்கிருக்கும் வரை அவர்களுக்கு உணவு தங்கு தடையின்றி கிடைக்கச் செய்வதும் இன்றியமையாதது. இதைத்தான் அங்குள்ள மாணவ, மாணவியர் எதிர்பார்க்கின்றனர். அவர்களது பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, உக்ரைன் நாட்டிலுள்ள பேருந்துகள் மூலமாகவோ அல்லது அதன் அண்டை நாடுகளிலுள்ள பேருந்துகள் மூலமாகவோ உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள 5,000 தமிழர்கள் உட்பட 16,000 இந்தியர்களை ஓரு சில நாட்களில் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளின் ஒப்புதலோடு பாதுகாப்பாக சாலை மார்க்கமாக அழைத்து வரவும், அவர்களுக்கு தங்கு தடையின்றி உணவு கிடைக்கச் செய்யவும், பின் அங்கிருந்து அவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரவும் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours