மனநலம் பாதிக்கப்பட்டவர் வீடியோவை வெளியிட்ட பெண் காவல் ஆய்வாளர் மீது ஐ.ஜி. நடவடிக்கை..!

Estimated read time 0 min read

உசிலம்பட்டி:

விசாரணையின் போது போலீசாரை சிரிக்க வைக்கும் அளவிற்கு அடுக்கு மொழியில் பேசிய மனநலம் பாதிக்கப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற பட்டதாரி இளைஞர் பேசும் வீடியோவை எடுத்து, சமூகவலைதளத்தில் வெளியிட்டு பரப்பிய தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பெண் காவல் ஆய்வாளர் மதன கலா என்பவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆய்வாளர் மதனகலாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. அன்பு உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வாளர் மீதான இந்த நடவடிக்கை, போலீஸ் வட்டாரத்திலும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சில நாள்களுக்கு முன் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு வீட்டில் திருட முயன்ற நபரை பிடித்த அப்பகுதிமக்கள், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் காவல் ஆய்வாளர் மதனகலா நடத்திய விசாரணையில், அந்த நபர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 31) என்றும், இவர் வியாபாரி ஒருவரின் இரு சக்கர வாகனத்தை திருடியவர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் மதனகலா விசாரணை நடத்தினார்.

அப்போது ராதாகிருஷ்ணன், தூய தமிழில் கவிதை நடையிலும், ஆங்கிலத்திலும் வாக்குமூலம் அளித்தார். அவர் அளித்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் சிரித்ததும் கமெண்ட் செய்ததும் அந்த ஆடியோவில் பதிவானது.

மேலும் விசாரணையில், அவர் கஞ்சா போதைக்கு அடிமையாகி, ஒரு மனநல காப்பகத்தில சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என்றும், சாவியுடன் யாராவது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து இருந்தால் அதை திருடி ஓட்டுவதும், பெட்ரோல் தீர்ந்து போனாலோ, பழுதாகி விட்டாலோ எங்காவது நிறுத்திவிட்டு சென்று விடுவதை பொழுதுபோக்காக செய்து வருவதாகவும் தெரியவந்தது. பின்னர் அவரை ஆய்வாளர் மதனகலா எச்சரித்து அனுப்பி வைத்தார்.

அடுக்குமொழி வசனம்பேசி போலீசாரையே அதிரவைத்த திருடனின் வாக்குமூலம்: வைரல் வீடியோ 

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. திருடனின் விசாரனையும் போலீஸார் அதை வீடியோ மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதும்  சர்ச்சையை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு, பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் மதனகலாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

பின்னர் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையாக, ஆய்வாளர் மதனகலாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. அன்பு உத்தரவிட்டார். இதனையடுத்து உடனடியாக பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் இருந்து ஆய்வாளர் மதனகலா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மனநலம் பாதிக்கப்பட்டவரை விசாரணை என்ற பெயரில் வீடியோ எடுத்து சிரித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிகழ்வு போலீஸ் வட்டாரத்திலும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours