சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில், மடிப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட திமுக வட்டச் செயலாளர் செல்வத்தின் மனைவி சமீனா வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாக கடந்த ஜன.19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
மாநிலத்தில் சுமார் 60% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
சென்னை
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் பெரும்பாலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. தலைநகர் சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளது. அதில் இப்போது வரை வெளியான 107 வார்டுகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாநகராட்சியான சென்னை மீண்டும் திமுக வசம் வந்துள்ளது.
சமீனா செல்வம்
இதில் திமுக சார்பில் 188ஆவது தொகுதியில் போட்டியிட்ட சமீனா செல்வம் வெற்றி பெற்றுள்ளார். இவரது கணவர் செல்வம், கடந்த பிப். மாதம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து திமுக சார்பில் அவரது கணவர் செல்வம் போட்டியிட இருந்த 188ஆவது வார்டில் சமீனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆனந்தியை 2,975 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
திமுக வட்டச் செயலாளர்
செல்வம் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் செல்வம். 38 வயதான செல்வம் அப்பகுதியின் திமுக வட்டச் செயலாளராகவும் உள்ளார். இவர் உள்ளாட்சி தேர்தலில் 188ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட இருந்தார். இதனிடையே கடந்த பிப். 1ஆம் தேதி மடிப்பாக்கம் ராம் நகரில் உள்ள இவரது வீட்டில் வைத்து மர்ம நபர்கள் சிலர், இவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
படுகொலை
அதில் படுகாயமடைந்த செல்வம் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே அவர் உயிரிழந்தார். தொழிற்போட்டி காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. அதன் பின்னரே அவர் போட்டியிட இருந்த 188ஆவது தொகுதியில் அவரது மனைவி சமீனா செல்வம் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் தான் இப்போது அவர் 2975 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours