நாளை வாக்கு எண்ணிக்கை.. ட்ரோன் மூலம் கண்காணிப்பு.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்.. டிஜிபி சைலேந்திர பாபு..!

Estimated read time 0 min read

சென்னை :

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை ஒட்டி தமிழகத்தில் நாளை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவானது நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்று நிறைவடைந்தது.

தேர்தலையொட்டி பதிவான வாக்குகள் நாளை காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதனை தொடர்ந்து மார்ச் மாதம் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.

டிஜிபி சைலேந்திரபாபு

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை எட்டியது தமிழகத்தில் நாளை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” சென்னை பெருநகர காவல்துறை பகுதியில் 10 மையங்கள், ஆவடி மாநகர காவல்துறை பகுதியில் 4 மையங்கள், தாம்பரம் காவல்துறை பகுதியில் 5 மையங்கள் என தமிழகம் முழுவதும் 279 மையங்களில் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.


வாக்கு எண்ணிக்கை

சென்னை பகுதியை தவிர்த்து மீதியுள்ள 37 மாவட்டங்களில் 259 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில், தமிழகத்தில் ஆயுதப்படையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், உள்ளூர் போலீஸார் என மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையையொட்டி, முக்கியமான இடங்களிலும், சந்திப்புகளிலும் அதிரடிப்படையினர், அதிவிரைவுப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 11799 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. அதேபோல வாக்கு எண்ணும் மையங்களின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு. அந்தப் பகுதி கண்காணிக்கப்படும்.

பலத்த பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 109 காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,417 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்,1,239 காவல் ஆய்வாளர்கள்,4,617 உதவி ஆய்வாளர்கள், 18,744 உள்ளூர் போலீஸார், 5,805 ஆயுதப்படைக் காவலர்கள்,3,143 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்கள்,6,748 ஊர்க்காவல் படை வீரர்கள் என மொத்தம் 40,910 பேர் பாதுகாப்புப்ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்கு 60 ஆயிரம் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.

ரோந்து பணி

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவர்கள் அடையாள அட்டை காண்பித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அதோடு மெட்டல் டிடெக்டர் மூலமாகவும் அவர்கள் சோதனை செய்யப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கையையொட்டி, அசம்பாவித சம்பங்களை தவிர்க்கும் வகையில் போலீஸாரை செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே ரோந்துப் பணியில் ஈடுபட வைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது”, என குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours