பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மெட்ராஸ் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார்.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட படங்களில், 8,500க்கும் பாடல்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். அவரது இசையை பயன்படுத்த எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவருடன் ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல், தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக கூறி, எக்கோ நிறுவனம் , அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு எதிராக பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமத், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த எக்கோ நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனத்துக்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்திருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வு விசாரித்தது. அப்போது ஆஜரான இளையராஜாவின் வழக்கறிஞர், ’தனி நீதிபதி, சட்டத்தின் பிரிவு 14ல் பதிப்புரிமை என்பதன் பொருளைப் பரிசீலிக்க தவறிவிட்டார், இசைப் பணியைப் பொறுத்தவரை, பதிப்புரிமை என்பது. எந்தவொரு மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கான பிரத்யேக உரிமை’ என்றும் இளையராஜாவின் (Music Composer Illyaraja) வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மேல் முறையீட்டு வழக்கு தொடர்பாக எகோ, அகி, யுனிசிஸ், கிரி டிரேடிங் ஆகிய இசை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இதற்கு முன்னதாக, பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான விவகாரத்தில், நெருங்கிய நண்பர்களாக இருந்த இளையராஜாவுக்கும், மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கும் இடையிலான விவகாரமும் பெரிய அளவில் பேசப்பட்டன.
இசையமைப்பாளருக்கு, பாடலாசிரியருக்கு, தயாரிப்பாளருக்கு பங்கிருப்பதாகவும், பாடலைப் பாடியவர்களுக்கு பங்கில்லையா என்ற கேள்விகளுக்கு மத்தியில் 2012ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட காப்பிரைட் சட்டத்தின் படி பாடியவர்களுக்கும் பங்கு உள்ளதாகவும் அந்தச் சட்டம் பொருள் கொள்ளப்படுகிறது.
அவரவருக்கு தேவையான வகையில் சட்டத்தை புரிந்துக் கொள்வதால் வரும் குழப்பமே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இளையராஜாவின் மேல்முறையீட்டு வழக்கில் வரும் தீர்ப்பு பல குழப்பங்களை தீர்த்து வைக்க உதவியாக இருக்கலாம்.
+ There are no comments
Add yours