கோவை:
கோவை மாவட்டத்தில் இருக்கும் கரூரைச் சேர்ந்த திமுகவினரை வெளியேற்ற வேண்டும், தேர்தலுக்கு துணை இராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை 10.30 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் மாவட் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். ஆட்சியர் இல்லாத நிலையில் அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 2.30 மணி 4 மணி நேரத்துக்கும் மேலாகவும் நீடித்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம மாவட்ட ஆட்சியர் சமீரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்த உடன்பாடும் ஏற்பட வில்லை. இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவரிடம் காவல் துறையினர் உறுதியளித்தனர்.
ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் போராட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் எச்சரிக்கையையும் மீறி தொடர்ச்சியாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அனைவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தாமோதரன், அமல்கந்தசாமி, ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், செல்வராஜ், சூலூர் கந்தசாமி ஆகியோரை குண்டுகட்டாக காவல்துறையினர் கைது செய்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் உள்ளிட்ட சிலர் படுத்துக்கொண்டு கைதாக மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுகட்டாக காவல்துறையினர் தூக்கி சென்று கைது செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது.
+ There are no comments
Add yours