“நாதக வேட்பாளர்களை கடத்தி வாபஸ் பெறவைத்துவிட்டனர்” – சீமான்..!

Estimated read time 1 min read

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்றோடு நிறைவுபெறும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் செயல்திட்டங்கள் குறித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் கடத்தப்பட்டு, கட்டாயத்தின்பேரில் அவர்களை தேர்தலிலிருந்து வாபஸ் பெற வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

தனது சந்திப்பின்போது சீமான் பேசுகையில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேர்தலில் போட்டியிடுகின்ற 60-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனியாக போட்டியிடும் நிலையில், `நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பாஜக வந்துவிடும்’ என திமுக-வினர் பிரசாரம் செய்துவருகின்றனர். இதுபோன்ற கருத்துகள், எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

கூட்டமாக கொள்ளையடித்தாலும் கொலை செய்தாலும் சரியென்ற நிலை நிலவுகிறது. இவற்றையெல்லாம் யார்தான் தட்டிக்கேட்பது? பணம் உள்ளவர்கள் தான் அரசியல் செய்ய வேண்டுமென்றால் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லக்கூடாது. மாறாக, பணநாயகம் நாடு என்றுதான் சொல்ல வேண்டும். திராவிட கட்சிகள் உற்பத்தி சார்ந்த துறைகளில் முதலீடு செய்யாமல், பொருட்களை கொள்முதல் செய்து அதில் முதலீடு செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டிவருகிறது.

அரசியல் மாற்றத்திற்காக மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இருந்தாலும்கூட திராவிட கட்சிகளை தாண்டி பிற கட்சிகளை ஆதரிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் அதற்காக திமுக, அதிமுக கட்சிகளுக்கே மாற்றி மாற்றி வாக்களித்தால் நாட்டில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது. இன்றிருக்கும் பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காததற்கு காரணம் திராவிட கட்சிகளே. நாட்டின் அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்றுவதற்காகவே நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது.

மற்றபடி, இப்போதுள்ள ஆட்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாங்கள் போட்டியிடவில்லை. மக்கள் இதை உணர்ந்து, `மாற்றம் வேண்டும் – மாற்ற வேண்டும்’ என்பதை சொல்லாகவும் செயலாகவும் இந்த தேர்தலில் செய்துகாட்ட வேண்டும். இரண்டு கட்சிகளும் ( திமுக, அதிமுக) மாறி மாறி என்ன சாதித்திருக்கிறார்கள்? இதை மக்கள் யோசிக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை பொய் வழக்கில் கைது செய்கின்றனர் திமுகவினர். உண்மையில் மனதில் `தில்’ இருப்பவர்கள் திமுகவில் இருக்கிறார்கள் என்றால், பிஜேபியின் வேட்பாளர்கள் ஒருவர்மீது அப்படி செய்து பார்க்கட்டுமே… தைரியம் இல்லாததால் தான் என் கட்சியின் வேட்பாளர்கள் மீது அவதூறு பரப்புகின்றனர், கடத்துகின்றனர். இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை மிரட்டும் திமுகவினரின் இந்தச் செயலுக்கு, நாம் தமிழர் கட்சி கட்டாயமாக தனது பதிலடியை திருப்பிக் கொடுக்கும். கடந்த கால வரலாற்றை திமுக திரும்பி பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தலில், பாஜகவை எதிர்த்து நிற்க பயந்து கூட்டணி கட்சிகளுக்கு திமுக இடத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளது. சொல்லப்போனால் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு காரணம் மோடி தான். அந்தவகையில் நியாயமாக பார்த்தால் துர்கா ஸ்டாலின் பிரதமர் மோடி படத்தை வைத்து தான் சாமி கும்பிட வேண்டும். 2024, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம், மக்கள் வாக்களிக்காவிடில் நாங்கள் ஏமாறப்போவதில்லை. மாறாக, மக்கள் தான் மற்றவர்களுக்கு வாக்களித்து தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

முதலில் திராவிடம் என்றால் என்ன, திராவிடர்கள் என்பவர்கள் யார் யார் என்பதெற்கலாம் முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லட்டும். அதுமட்டுமல்ல. தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி கடன் எப்படி வந்தது என்றும் சொல்லவேண்டும். இதுவொரு பக்கமெனில், மற்றொரு பக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், உண்மையிலேயே இலவச மின்சாரம்தானா என தெரியப்படுத்தவும். ஏனெனில் பெயர் மட்டும் தான் அப்படியிருக்கிறது. போலவே விவசாயிகளுக்கு உண்மையிலேயே தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறதா என்பதற்கும் இந்த அரசு பதில்கூற வேண்டும்” என்றார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours