Plastic Banned : ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்‍கு வரும் ஜூலை 1 முதல் தடை!: உற்பத்தி, விற்பனை என அனைத்தையும் நிறுத்த ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு..!!

Estimated read time 1 min read

டெல்லி:

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அனைத்து தரப்பினரும் வரும் ஜூன் 30ம் தேதியோடு நிறுத்த ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. பூமியின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்படுத்தி வரும் மிக முக்கிய பொருளாக இருப்பது பிளாஸ்டிக். இலகுவாக இருக்கிறதே என கடைக்கு செல்லும் போது கைகளை வீசி சென்று, பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வாங்கி வருகிறோம். இந்த பிளாஸ்டிக் மீண்டும் குப்பைக்கு தான் செல்கிறது. ஆனால் அது பூமியில் பல நூறாண்டுகள் மக்கிப் போகாமல் தங்கி இயற்கை சமன்பாட்டை பாழ்படுத்தி வருகிறது.

நிலத்தில் ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த பிளாஸ்டிக் தற்போது கடலுக்கும் சென்று அங்கு வசித்து வரும் உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்திவருகின்றன. இந்நிலையில், ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒன்றிய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு இணங்க ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி இருப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு வரும் ஜூலை 1ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது முட்டுகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கீரிம் குச்சிகள், பாலிஸ்திரீன் தெர்மாகோல், தட்டுகள், கோப்பைகள், கண்ணாடிகள், முட் கரண்டிகள், கரண்டிகள், கத்திகள், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 30ம் தேதிக்குள் மேற்குறிய பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு, பூஜ்ஜியமாகி இருப்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை பொதுமக்களும் வரும் ஜூன் 30ம் தேதியோடு நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதித்தல், சுற்றுச்சூழல் இழப்பீடு விதித்தல், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours