சென்னை :
தேர்தலின் பெயரால் நகரை குப்பை காடாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி 117-வது வார்டில் தேர்தலில் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட தனது போஸ்டர் மீது மற்ற கட்சி வேட்பாளர் போஸ்டர் ஒட்டியுள்ளதாக கூறி, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனுமதியின்றி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்ட தடை உள்ளதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட திபதிகள், ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக விதிகளை மீறி போஸ்டர்கள் ஓட்ட எவருக்கும் அனுமதிக்க கூடாது என்று சென்னை மாநகராட்சிக்கும் காவல் ஆணையருக்கு உத்தரவிடுகிறோம். அரசு சுவர்களில் போஸ்டர் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தால் அதை அகற்ற ஏற்படும் செலவை வேட்பாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். போஸ்டர் ஓட்டுபவர்களுக்கு எதிராக வழகுப்பதிவு செய்ய வேண்டும். தனியாருக்கு சொந்தமான சுவர்களில் அனுமதி பெற்றே போஸ்டர் ஒட்டப்பட வேண்டும். தேர்தலின் பெயரால் நகரை குப்பை காடாக்கக் கூடாது. உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். வேட்பாளர்கள் அரசு கட்டிட சுவர்கள், தனியார் சுவர்களில் அனுமதி இன்றி போஸ்டர் ஓட்டக்கூடாது என விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுகிறோம், ‘ என்று கூறியுள்ளனர். மேலும் மேற்கண்ட உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து பிப்ரவரி 21ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
+ There are no comments
Add yours