Schools Reopens : கூடுதல் தளர்வுகள்: மழலையர் பள்ளிகளை திறக்க வாய்ப்பு..?

Estimated read time 1 min read

சென்னை,

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா பரவல் அதிகரித்தது. எனவே ஜனவரியில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பல்வேறு கடைகளுக்கு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியது. எனவே இரவு நேர ஊடரங்கு கடந்த 28-ந் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. மேலும், பிப்ரவரி 1-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி நேரடி வகுப்புகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15-ந் தேதியுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.
இந்த சூழலில், தமிழகத்தில் கொரோனா பரவல் நாளொன்றுக்கு 3,200-க்கும் குறைவாக சென்றுள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை மேலும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மேலும் தளர்வு அளிக்கப்படுமா என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
இதன்படி இன்று சென்னை, தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு மருத்துவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனையில், வரும் 16-ம் தேதி முதல் மழலையர் பள்ளிகளை திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  திறந்த வெளி, உள் அரங்கு பொருட்காட்சிகளுக்கு அனுமதி, திருமண விழாவில் 100 பேர் பங்கேற்க அனுமதி உள்ளிட்டவை  வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours