பா.ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது ஏன்…?- சென்னை போலீஸ் விளக்கம்..!

Estimated read time 1 min read

சென்னை:

சென்னை தி.நகர் வைத்தியராமன் தெருவில்  தமிழக  பா.ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது.
பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும் அங்கு நேற்று நள்ளிரவு  பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் இந்தநிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் வாலிபர் ஒருவர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
பா.ஜனதா அலுவலகம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய அந்த வாலிபர் திடீரென தான் மறைந்து வைத்து இருந்த 3 பெட்ரோல் குண்டுகளை எடுத்து சரமாரியாக பா.ஜனதா அலுவலகம் மீது வீசினார்.
பெட்ரோல் குண்டுகள் வெடித்த போது அதில் இருந்து தீப்பிடித்து உள்ளது. இதில் பா.ஜனதா அலுவலக வளாகத்தில் உள்ள சுவர்கள், தரை ஆகியவை லேசாக சேதம் அடைந்தன.
தீப்பிடித்ததால் சுவர்கள் மற்றும் தரையில் போடப்பட்டு இருந்த டைல்ஸ் ஆகியவை கருப்பு நிறத்தில் மாறின. இதற்கிடையே பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் திடீரென ஒரு வாலிபர் வந்து பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசியதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் பெட்ரோல் குண்டுகளை வீசிய வாலிபர் யார் என்று பார்த்து பிடிக்க முயற்சி செய்த நிலையில் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதற்கிடையே பக்கத்து வீடுகளில் இருந்த பாதுகாவலர்களும், அக்கம் பக்கத்தினரும் பா.ஜனதா அலுவலகம் நோக்கி ஓடி வந்தனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரிப்பதற்காக தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பா.ஜனதா அலுவலக வளாகத்தில் சிதறிக் கிடந்த பெட்ரோல் குண்டு பாகங்களை சேகரித்து அதனை ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.ஏற்கனவே  இவர் பெட்ரோல் குண்டு வீசிய வழக்குகளில் கைதானவர்.
மத ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ அந்த நபர் ஈடுபடவில்லை. பொதுப் பிரச்சினையில் இந்த நபர் தாமாகவே ஈடுபட்டு குடிபோதையில் இது போன்று நடந்துகொள்ளும் மனநிலை கொண்டவர்.
நீட்தேர்வு தொடர்பாக பா.ஜனதாவின் நிலைபாட்டை எதிர்த்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசியதாக  கைது செய்யப்பட்ட நபர் வாக்கு மூலம் அளித்து உள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத், தேனாம்பேட்டை காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. வினோத் மீது 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளன.
2015ல் மாம்பலம் பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றை மூட வலியுறுத்தி, பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டவர். 2017ல் தேனாம்பேட்டை காவல்நிலைய வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours