கோவிலில் என்ன அணியனும்னு ஆகமத்தில இருக்கா? கண்டித்த நீதிபதி..!

Estimated read time 0 min read

திருச்சி:

இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, நுழை வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறிய மனுவிற்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.  கோவில் வளாகங்ககோவில்களில் அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா? ஆலய பிரவேச சட்டப்படி, இந்துக்கள் அல்லாதோர், வெளிநாட்டவர்கள் கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என விளம்பர பலகை வைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கடந்த 1947ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை எனக் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1970ம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோரும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம், 1972ல் ரத்து செய்த போதும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத நிலையில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, நுழை வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.  மேலும், மரபு மற்றும் மதம் சாராத நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்க கூடாது எனவும், கோவில் வளாகங்களில் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கோவில்களில் தின்பண்டங்கள் விற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், கோவில் மரபுபடி உடை அணிந்து வர வேண்டும் எனவும், தஞ்சை, மதுரை போன்ற கோவில்களில் பிற மதத்தவர்கள் லுங்கி, டவுசர் அணிந்து வருவதாகவும், வெளிநாட்டவர்கள் அனுமதிக்க கூடாது என்றும் வாதிட்டார். பல கோவில்களில் உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நாட்டில் ஹிஜாப், கோவில்களில் வேட்டி ஆகியவற்றுக்காக போராடுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா அல்லது மத ரிதியாக பிளவுபட்டதா என கேள்வி எழுப்பினர்.

அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான மரபு பின்பற்றப்படுகிறதா எனவும், ஆகம சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறிப்பிட்ட உடை தான் அணிய வேண்டும் என  மரபு உள்ளதா? எந்த கோவிலில் உள்ளது எனத் கேள்வி எழுப்பினர்.  அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? ஆகம சாஸ்திரத்தில்  வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா என நீதிபதிகள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், அதுசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்றும், அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் ரத்து செய்ததாகவும்,  பல கோவில்களில் இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய கூடாது என விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோவிலில் ஆண் பக்தர்கள், மேலாடை அணிய கூடாது என்ற ஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ளதாகவும் தெரிவித்த தலைமை வழக்கறிஞர், நீதிமன்றம் எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது என்றும், இந்து அல்லாதோர், கொடி மரத்தை தாண்டி கோவில்களுக்குள் நுழைய தடை விதிக்கும் மரபு இன்னும் பல கோவில்களில் அமலில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து,  மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்த கூடாது என்றும், இது மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றது என்றும் கூறிய நீதிபதிகள், மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours