இந்தியா:
கடந்த ஆண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணத்தை உயர்த்தின. அதேபோல் இந்த ஆண்டும் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்களை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் 2022 ஆம் ஆண்டில் மொபைல் அழைப்பு மற்றும் சேவை கட்டணங்கள் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக கூறியுள்ளது.
ஒரு வாடிக்கையாளரின் சராசரி வருவாயை (ARPU) ரூ.200 -க்கு உயர்த்த வேண்டும் என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டம். இதனையொட்டி முன்னோட்டமாக நவம்பர் 2021-ல், ஏர்டெல் நிறுவனம் முதன்முதலாக மொபைல் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களை 18 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தியது. இதன்பிறகு மற்ற நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தின
எப்போது உயரும்?
பார்தி ஏர்டெல்லின் இந்தியா மற்றும் தெற்காசியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கோபால் விட்டல் கூறுகையில், “2022ல் கட்டண விகிதங்கள் அதிகரிக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், அடுத்த மூன்று நான்கு மாதங்களில் இது நடக்காது. கடந்த ஆண்டைப் போலவே, கட்டண உயர்வு குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுப்போம் என நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை அறிவிக்கும்போது தெரிவித்தார்.
டிசம்பர் காலாண்டு லாபம் குறைவு
பார்தி ஏர்டெல்லின் டிசம்பர் மாத நிகர ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.8 சதவீதம் சரிந்து ரூ.830 கோடியாக உள்ளது. இந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 12.6 சதவீதம் அதிகரித்து ரூ.29,867 கோடியாக உள்ளது. இதுகுறித்து பேசிய விட்டல், “எங்கள் ARPU 2022 -ல் மட்டும் 200 ரூபாயை எட்டும் என்று நம்புகிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் ரூ.300-ஐ அடையும்” எனத் தெரிவித்தார்.
வாடிக்கையாளர் அதிகரிப்பு
இந்தியாவில் ஏர்டெல்லின் 4ஜி சந்தாதாரர்கள் டிசம்பர் 2021 காலாண்டில் 18.1 சதவீதம் அதிகரித்து 19.5 கோடியாக உயர்ந்துள்ளனர். முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 16.56 கோடியாக இந்த எண்ணிக்கை இருந்தது. இந்தியாவில் ஏர்டெல் நெட்வொர்க்கில் தனிநபர் டேட்டா பயன்பாடு 16.37 ஜிபியில் இருந்து 18.28 ஜிபியாக அதிகரித்துள்ளது.
+ There are no comments
Add yours