“திராவிட” ரூட்டில் பாஜக.. “இரு மலை”களுக்கு நடுவில் அண்ணாமலை.. குறி தப்புமா? கொங்குவில் மலருமா தாமரை..?

Estimated read time 1 min read

சென்னை:

நடக்க போகும் தேர்தலில் பாஜக தனித்து களமிறங்கும் சூழலில் கொங்குவை வெல்லுமா? அக்னிப்பரீட்சையில் அண்ணாமலை பாஸ் ஆவாரா? என்பது போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன..!

எப்போது தேர்தல் பேச்சுவார்த்தை நடந்தாலும், நாங்கள் தனித்து நின்றாலே வெற்றி பெற்றுவிடுவோம் என்பதை தவறாமல் சொல்லிவிடும் தமிழக பாஜக.. ஆனால், இறுதியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டுவிடும்.

இந்த முறை அப்படி எதுவுமே நடக்கவில்லை.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாதது உட்பட வேறு சில காரணங்களுக்காகத்தான் கூட்டணியில் போட்டியிட முடியாமல் தனித்து பாஜக களமிறங்குவதாக சொல்லப்பட்டு வருகிறது.

தனித்து போட்டி

தனித்துபோட்டி என்ற துணிச்சல் முடிவு ஏற்படையதே என்றாலும் இது எந்த அளவுக்கு பாஜகவுக்கு சாத்தியக்கூறுகளை பெற்றது என்பது ஆவலை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களை தொடர்பு கொண்டு பேசினோம்.. அவர்கள் சொன்ன கருத்துக்கள்தான் இவை: “இப்போது 4 எம்எல்ஏக்களை பெற்றதே அதிமுகவின் தயவால்தான் என்பதை பாஜகவே மறுக்க முடியாது.. ஆனால், பாஜகவுக்கு இந்த முறை வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

தலைவர்கள்

காரணம், இதுவரை இல்லாத அளவிற்கு 11 முனை போட்டி நிலவும் வகையில் தேர்தல் களம் உள்ளது.. எப்படியும் வாக்குகள் பிரியவே செய்யும்.. இது பாஜக தலைவர்களும் உணராமல் இல்லை.. பாஜகவுக்கு தமிழகத்திலேயே கொங்கு மண்டலத்தில் தான் ஓரளவு ஆதரவு உள்ளது.. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 13,000 இடங்களுக்குப் போட்டி நடந்தாலும், இதில், கோவை, சேலத்தில் 2,000 இடங்கள் இருக்கின்றன.. இதில் எத்தனை இடங்களை திமுக கூட்டணி, அதிமுக பிடிக்க போகிறது? என்பது முதல் எதிர்பார்ப்பு.. அதற்கு பிறகுதான், மேயர், சேர்மன் போன்ற பதவிகள் கணக்கில் வரும்.. இப்போதைக்கு ஆளும் தரப்புக்கே சாதகமான கள நிலவரம் உள்ளது.

அதிமுக கோட்டை

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருந்தாலும், இப்போதைக்கு திமுகவுக்கு வாய்ப்பு அதிகம்.. அடுத்தபடியாக நாம் தமிழருக்கு இங்கு வாக்கு சதவீதம் ஓரளவு கிடைக்கலாம்.. அதற்கு பிறகுதான் பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்கும்.. கோவையில் அதிமுக தோற்றால் அது வேலுமணியின் தோல்வியாக பார்க்கப்படும். திமுக தோற்றால் அது செந்தில்பாலாஜியின் தோல்வியாக பார்க்கப்படும்.. மற்றபடி பாஜகவை போட்டியாக கருதப்பட முடியாது.. ஆனால், எந்த அளவுக்கு இங்கு வாக்கு வங்கியை தனித்து பெறுகிறது என்பது மிகவும் முக்கியம்.

ஆதரவுகள்

பாஜக வெயிட்டான கட்சி, பாஜகவுக்கு ஆதரவுகள் நாலாபக்கமும் பெருகி கொண்டிருக்கின்றன.. பாஜக மட்டுமே திமுகவுக்கு மாற்று என்றெல்லாம் இத்தனை நாட்களும் சொல்லி கொண்டிருந்தவர் அண்ணாமலை மட்டுமே.. ஒருவேளை அவரது ஆசைப்படியே பாஜக தனித்து போட்டி என்ற முடிவு காரணமாக இருக்கலாம்.. அவரது விருப்பமும் தவறில்லை.. அதற்கேற்றபடி, பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு நகர்ப்புற மக்கள் மத்தியில் ஓரளவு ஆதரவும் பெருகி வருவதை மறுக்க முடியாது.

கொங்கு மண்டலங்ம்

அதேசமயம், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 20 சீட்களை வாங்கி, அதில் வெறும் 4 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.. இந்த மண்டலத்தில் 2 தொகுதிகளை வென்ற நிலையில், இப்போது கூட்டணியை முறித்து கொண்டு களம் காணும்போது, அதன் வெற்றியானது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. வேண்டுமானால், திமுகவின் குறைகளை பிரச்சாரங்களில் சொல்லி, அதன்மூலம் ஆதரவை பெருக்கி கொள்ள முனையலாம்.. கன்னியாகுமரி பகுதிகளில் அதிமுகவை முந்திக் கொண்டு பாஜக மேலெழுந்து வர வாய்ப்புள்ளதே தவிர, கொங்குவில் அப்படி அறிகுறி தெரியவில்லை” என்றனர்.

வேட்பு மனு தாக்கல்

இதனிடையே, மேற்கு மாவட்டங்களில் பாஜக சார்பில் போட்டியிட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தந்துள்ளனர்.. வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. அவர்கள் வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டனர். மற்ற நகர்ப்புற உள்ளாட்சிகளை விட, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாநகராட்சிகளில், கணிசமான வார்டுகளை தனியாக கைப்பற்றும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கி உள்ளதாக தெரிகிறது.. அதற்காகத்தான், கோவையில், 100 உட்பட 250க்கும் மேற்பட்ட வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சிறுபான்மையினர்

மாநகராட்சிகளில் தனித்தனி குழுக்கள் உருவாக்கப்பட்ட, புது புது யுக்திகளையும் கையில் எடுத்துள்ளது.. அனைத்து சமுதாயத்தினருக்கும் தேர்தலில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்றாலும் கோவை, ஈரோடு மாநகராட்சிகளில் கிறிஸ்துவர், இஸ்லாமியர்களும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. இப்போது மங்களூர் சம்பவத்தினால் பரபரப்பு கூடியுள்ள நிலையில், சிறுபான்மையினருக்கான வாக்குகளை பாஜக எப்படி பெற போகிறது என்பது எதிர்பார்ப்புக்குரியதுதான்..

அண்ணாமலை

விரைவில், பிரச்சாரத்துக்கு பொன். ராதாகிருஷ்ணன். எச்.ராஜா, குஷ்பு, போன்ற சீனியர்கள் வரஉள்ளனர்.. இதனால் வாக்கு சதவீதம் கூடவும் வாய்ப்புள்ளது.. அதுமட்டுமல்ல, இந்தத் தேர்தலில், ஆள் பலம், பண பலத்தை காட்டுவதில் திராவிட கட்சிகளின் பாணியையே பாஜக கையில் எடுத்துள்ளதால், கொங்கு மண்டலம் தனி கவனத்தை பெற்று வருகிறது.. திமுக, அதிமுக என்ற மலைகளுக்கு நடுவில் அண்ணாமலை ஆசை நிறைவேறுமா? பாஜக வெல்லுமா? பார்ப்போம்..!

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours