ஜவுளி சந்தையில் அரசியல் கட்சியினர் வேட்டி, சேலை விற்பனை மும்முரம்… ஒரு வாரத்தில் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை..!

Estimated read time 1 min read

ஈரோடு:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, ஈரோடு ஜவுளி சந்தையில் அரசியல் கட்சியினர் வேட்டி, சேலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வரும் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தொடர்ந்து தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  வாக்காளர்கள் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களும், தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வேட்பாளர்கள் பொதுமக்களை கவரும் வகையில், ஈரோடு ஜவுளி சந்தையில் அரசியல் கட்சியினர் வேட்டி, சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதேபோல் துண்டு, மப்பிளர், தொப்பி விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.

ஈரோடு ஜவுளி சந்தையில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் வண்ணம் பொறித்த வேட்டி, சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த ஒரு வாரமாக விற்பனை நடைபெற்று வருகிறது. சேலையை பொறுத்தவரை ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. வேட்டியை பொருத்தவரை ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. துண்டு ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மப்பிளர் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறும்போது, கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கடந்த 2 வாரமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக சில்லரை வியாபாரம் ஓரளவு நடந்து வருகிறது.

தற்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலைஒட்டி அரசியல் கட்சியினர், தொண்டர்களை கவரும் வகையில் வேட்டி, சேலைகள் விற்பனை கடந்த 1 வாரமாக மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.10 லட்சத்திற்கு அரசியல் கட்சியினர் வேட்டி, சேலைகள், துண்டு, மப்ளர் போன்றவை விற்பனையாகி உள்ளது என்றனர்.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours