தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் பெண்கள் குறித்த ஆபாச பேச்சால் கைதாகி குண்டர் சட்டத்தில் பப்ஜி மதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து ஆடி (Audi ) ரக இரண்டு கார்கள். சென்னை சைபர் கிரைம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதனின் மனைவி கிருத்திகா பிணையில் வந்த போது செய்தியாளர்களை சந்தித்து, எங்களிடம் எந்தவித சொகுசு காரும் இல்லை Audi A6 என்ற ஒரே ஒரு கார்தான் உள்ளது என பேசியது வைரலானது. போலீஸ் பறிமுதல் செய்ததாக கூறும் Audi R8 என்ற கார் எங்களுடையது இல்லை என தெரிவித்தார்.
இந்த நிலையில், தங்களிடம் சொகுசு காரே இல்லை அதுவும் Audi R8 ரக கார் எங்களுடையது இல்லை என தெரிவித்த மதனின் (PUBG Madan) மனைவி கிருத்திகா, காவல்துறை பறிமுதல் செய்து வைத்துள்ள இரண்டு ஆடி ரக கார்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Audi A6 காரை 13 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகவும், Audi R8 காரை 47 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகவும், சாப்ட்வேர் என்ஜினியரான தானும், தனது கணவர் மதன் யூ டியூப் மூலமும் சம்பாதித்த பணத்தில் வாங்கிய கார் என அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருந்து பணிபுரிந்து வந்த தான் தற்போது அலுவலகம் சென்று பணிபுரிய வேண்டிய சூழல் உள்ளதால் தான் அலுவலகம் செல்ல இந்த கார்கள் தேவை எனவும், வழக்கிற்கு தேவையில்லாமல் தங்களது காரை பறிமுதல் செய்து வைத்துள்ள காவல் துறையிடம் இருந்து கார்களை மீட்டுத் தர வேண்டும் என அந்த மனுவில் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா குறிப்பிட்டுள்ளார்.
பப்ஜி மதன் மீதான வழக்கில், ஊரடங்கு காலத்தில் பலருக்கும் உதவி செய்வதாக இரண்டாயிரத்து 848 நபர்களிடம் சுமார் 2.89 கோடி ரூபாய் பணத்தை பெற்று தான், அதிலிருந்து தான் இந்த இரண்டு ஆடி கார்களையும் மதன் வாங்கியிருப்பதாக சைபர் கிரைம் போலீசார் குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
+ There are no comments
Add yours