தமிழக காவல்துறையில் மிக உயரிய பதவி டிஜிபி அந்தஸ்து பதவி ஆகும், அதற்கு கீழ் ஏடிஜிபி பதவி ஆகும். இப்பதவிகளுக்கு தகுதியாக உள்ள ஏடிஜிபி, ஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த வரிசைப்பட்டியலை தயாரிக்கும் குழு கடந்த 29 ஆம் தேதி கூடி வரிசைப்பட்டியலை தயாரித்து முதல்வர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. விரைவில் பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது..
காவல்துறை தேர்வு முறை
தமிழக காவல்துறையில் நான்கு வகைகளில் தேர்வு மூலம் பணிக்கு தேர்வு நடக்கிறது. கிரேட்-1 காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமும், உதவி ஆணையர்கள் (அ) துணை கண்காணிப்பாளர்கள் குருப் ஒன் தேர்வு மூலமும், கண்காணிப்பாளர் (எஸ்.பி) லெவல் அதிகாரிகள் சிவில் தேர்வு (ஐபிஎஸ்) மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். கடைகோடி காவலர் அதிகப்பட்சம் ஆய்வாளர் வரை தனது பணிகாலத்தில் பதவி உயர்வு பெறலாம், உதவி ஆய்வாளராக தேர்வாகிறவர் அதிகப்பட்சம் துணை ஆணையர் வரை வந்து ஓய்வு பெறுவார். குரூப் 1 அதிகாரி அதிகப்பட்சம் ஏடிஜிபி அந்தஸ்து வரை வந்து ஓய்வு பெறுவார். ஐபிஎஸ் அதிகாரிகள் அதிகப்பட்சம் டிஜிபி, அதிலும் சட்டம் ஒழுங்கு டிஜிபி (HOPF) வரை வரலாம்.
3 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக பதவி உயர்வு
இதில் அவ்வப்போது அவரவர் தேர்வுப்பெற்ற ஆண்டை வைத்து பதவி உயர்வும் கிடைக்கும். இதில் உயர்ந்த பதவியான டிஜிபி, ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ளவர்கள் காவல் ஆணையராக, அல்லது ஒரு துறையின் உயர்ந்தப்பட்ச அதிகாரிகளாக வருவார்கள். தற்போது தமிழகத்தில் ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவுடன் சேர்த்து 13 டிஜிபிக்கள் உள்ளனர். தற்போது 1991 ஆம் ஆண்டு பேட்ச் ஏடிஜிபிக்களாக உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர் டிஜிபி பதவி உயர்வுக்காக காத்திருக்கும் நிலையில் தற்போது அவர்களுக்கு டிஜிபி பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உயர்ந்த கடைசி பதவி டிஜிபி பதவி
காவல்துறையில் உயர்ந்த பதவி இறுதியான பதவி டிஜிபி பதவி ஆகும். அதில் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி ஆகும். ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.எஸ்.பியாக பதவியில் இணைந்து எஸ்.பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என 5 கட்ட பதவி உயர்வை அடைகிறார்கள். இதில் டிஜிபி பதவியை மட்டும் மாநில அரசு அளிக்க முடியாது. பரிந்துரை செய்தால் அது யுபிஎஸ்சியால் அங்கிகரிக்கப்படும். அதன்பின்னரே அவர்களுக்கான பணியிடம் ஒதுக்க முடியும்.
தற்போதுள்ள டிஜிபிக்கள் விவரம்
தற்போதுள்ள டிஜிபிக்களும், அவர்கள் ஐபிஎஸ் பணியில் இணைந்த ஆண்டும், தற்போதுள்ள பதவியும், ஓய்வு தேதியும் வருமாறு. 1987 பேட்ச் அதிகாரிகள்:
1. சைலேந்திர பாபு – தற்போதைய காவல் துறையின் தலைவராக (HOPF) 1987 பேட்ச்- ஜூன் 2024-ல் ஓய்வு.
2. கரன் சின்ஹா – டிஜிபி – தீயணைப்புத்துறை (1987 பேட்ச் ) பிப்ரவரி 2022- இம்மாத இறுதியில் ஓய்வு. 1988 பேட்ச் அதிகாரிகள்:
3. சஞ்சய் அரோரா – டெல்லி (இந்தோ-திபெத்தியன் எல்லை பாதுகாப்புப் படை) அயல்பணியில் உள்ளார். (1988 பேட்ச்) ஜூலை 2025-ல் ஓய்வு.
4. சுனில்குமார் சிங் – சிறைத்துறை டிஜிபி (1988 பேட்ச்) 2022 அக்டோபரில் ஓய்வு. 1989 பேட்ச் அதிகாரிகள்
5. கந்தசாமி – லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி (1989- பேட்ச்) – 2023 ஏப்ரல் மாதம் ஒய்வு.
6. ஷகீல் அக்தர் – சிபிசிஐடி டிஜிபி (1989 பேட்ச்) – 2022 அக்டோபரில் ஓய்வு .
7. ராஜேஷ் தாஸ் – (1989 பேட்ச்) பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் – 2023- டிசம்பரில் ஓய்வு.
8. பிரஜ் கிஷோர் ரவி (பி.கே.ரவி) – டிஜிபி டான்ஜெட்கோ (1989 பேட்ச்)- 2023 டிசம்பரில் ஓய்வு. 1990 பேட்ச் அதிகாரிகள்.
9. சங்கர் ஜிவால் ( சென்னை காவல் ஆணையர்). பிஹாரைச் சேர்ந்தவர். 2023 ஆகஸ்டில் ஓய்வு.
10. ஏ.கே.விஸ்வநாதன் (டிஜிபி, காவலர் வீட்டு வசதி வாரியம்) தமிழகத்தைச் சேர்ந்தவர். 2024 ஜூலை மாதம் ஓய்வு.
11. ஆபாஷ்குமார் (டிஜிபி – உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு ) பிஹாரைச் சேர்ந்தவர். 2025 மார்ச் மாதம் ஓய்வு.
12. டி.வி. ரவிச்சந்திரன் (டிஜிபி. மத்திய உளவுத்துறை, ஐபி. சென்னை ) ஆந்திராவைச் சேர்ந்தவர். 2024 ஆகஸ்டு மாதம் ஓய்வு.
13. சீமா அகர்வால் (டிஜிபி தலைமையிடம் சென்னை ) ராஜஸ்தானைச் சேர்ந்தவர். 2026 ஜூன் மாதம் ஓய்வு.
புதிய டிஜிபிக்கள், ஏடிஜிபிக்கள் யார் யார்?
மேற்கண்ட அதிகாரிகள் டிஜிபிக்களாக உள்ள நிலையில் 1991 ஆண்டு ஏடிஜிபிக்கள் சிலர் பதவி உயர்வுக்கான தகுதியை அடைந்த நிலையில் இதற்கான எம்பேனல் கமிட்டி ( இதில் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆகியோர் இருப்பர்) கூடி பட்டியலை இறுதி செய்துள்ளது. இது தவிர இக்குழு ஐஜி அந்தஸ்த்திலிருந்து ஏடிஜிபி அந்தஸ்த்துக்கு பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலையும் இறுதிப்படுத்தியுள்ளது.
முதல்வர் பார்வைக்கு பட்டியல்
எம்பேனல் (Empanel) குழு தயாரித்து இறுதிப்படுத்திய பட்டியலை முதல்வர் இன்று பார்வையிட்டு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவி உயர்வு உடனடியாக அறிவிப்பாக வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பதவி உயர்வு பெறும் நிலையில் உள்ள ஏடிஜிபிக்கள், ஐஜிக்கள் அவர்கள் ஓய்வு பெறும் காலம் வருமாறு:
டிஜிபியாக பதவி உயர்வு பெறும் ஏடிஜிபிக்கள்
1. அம்ரேஷ் புஜாரி (தற்போது சைபர் கிரைம் ஏடிஜிபியாக உள்ளார்) ஒடிசாவை பூர்வீகமாக கொண்டவர். (2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார்) 2. எம்.ரவி (ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ளார், தற்போது தாம்பரம் காவல் ஆணையராக உள்ளார்) இந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற உள்ளார். 3. ஜெயந்த் முரளி (சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக உள்ளார்) இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளார். 4. கருணாசாகர் (அயல்பணியில் டெல்லியில் பணியாற்றுகிறார்) 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார். தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெறும் 1991 பேட்ச் அதிகாரிகளுடன் சேர்த்து 17 டிஜிபிக்கள் தமிழகத்தில் உள்ளனர். இதில் 1.கரன் சின்ஹா, 2.ரவி, 3.ஜெயந்த் முரளி, 4. சுனில்குமார் சிங், 5.ஷகில் அக்தர் ஆகியோர் இந்த ஆண்டு முடிவுக்குள் ஓய்வு பெற உள்ளதால் டிஜிபிக்கள் எண்ணிக்கை 12 என்கிற அளவில் இந்த ஆண்டு முடிவில் இருக்கும்.
பதவி உயர்வு
இது தவிர ஐஜிக்களாக பதவியில் இருக்கும் 1997 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரிகள் 6 பேருக்கு ஏடிஜிபி அந்தஸ்து பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அவர்கள் விவரம் வருமாறு:
1. ஆயுஷ்மணி திவாரி (உ.பியைச் சேர்ந்தவர் 2031 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெறுவார்) தற்போது அயல்பணியில் உள்ளார்.
2. மஹேஷ்வர் தயாள் தற்போது (ஹரியானாவைச் சேர்ந்தவர்) தற்போது அயல்பணியில் உள்ளார். 2032 ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ளார்.
3. சுமித் சரண் (பிஹாரைச் சேர்ந்தவர்) அயல்பணியில் எல்லைப் பாதுகாப்புப்படை ஐஜியாக உள்ளார். தற்போது 2031 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளார்.
4. மோடக் அபின் தினேஷ் (மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்) தற்போது 2030 ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ளார். தற்போது பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜியாக உள்ளார்.
5. சஞ்சய் குமார் சிங் (உ.பியைச் சேர்ந்தவர்) தற்போது ஐஜியாக அயல்பணியில் உள்ளார். 2027 ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ளார்.
6. செந்தாமரைக்கண்ணன் (தமிழகத்தைச் சேர்ந்தவர்) தற்போது மாநில மனித உரிமை ஆணைய ஐஜியாக உள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வுப்பெற உள்ளார்.
7. முருகன் (தமிழகத்தைச் சேர்ந்தவர்) 2024 ஜூன் மாதம் ஓய்வுப்பெற உள்ளார், தற்போது
மேற்கண்ட பதவி உயர்வுகள் விரைவில் வரவாய்ப்புள்ளது.
+ There are no comments
Add yours