பெங்களூரு,
பா.ஜனதாவின் மூத்த தலைவர் எடியூரப்பா. கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான இவருக்கு ராகவேந்திரா, விஜயேந்திரா என்ற மகன்களும், அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி என்ற மகள்களும் உள்ளனர். இவர்களில் பத்மாவதியின் மகள் சவுந்தர்யா(வயது 30). இவரது கணவர் நீரஜ் ஆவார். சவுந்தர்யாவும், நீரஜும் டாக்டர்கள் ஆவார்கள். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 2 பேரும் டாக்டர்களாக பணியாற்றி வந்தனர்.
நீரஜ், சவுந்தர்யாவுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. இந்த தம்பதிக்கு 9 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வசந்த்நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2½ ஆண்டுகளாக நீரஜும், சவுந்தர்யாவும் வசித்து வந்தனர். அவர்களது வீட்டில் ஒரு மூதாட்டியும், மற்றொரு நபரும் வீட்டு வேலை செய்து வருகின்றனர்.
தூக்கில் தொங்கினார்
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் நீரஜ் தனியார் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அப்போது தனது 9 மாத குழந்தையுடன் சவுந்தர்யா வீட்டில் இருந்தார். பின்னர் குழந்தையை வீட்டில் வேலை செய்யும் மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு, மற்றொரு அறைக்கு சென்று சவுந்தர்யா உட்புறமாக கதவை பூட்டி கொண்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. கதவை திறக்கும்படியும் வேலைக்காரர்கள் பல முறை கூறியும், அவர் திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த வேலைக்காரர்கள் நீரஜுக்கு தகவல் தெரிவித்தனர். காலை 10.30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு நீரஜ் விரைந்து வந்தார். வீட்டு கதவை சவுந்தர்யா திறக்காததால், கதவை உடைத்து கொண்டு நீரஜ் மற்றும் வேலைக்காரர்கள் உள்ளே சென்றார்கள். அப்போது சவுந்தர்யா மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
சவுந்தர்யா தற்கொலை
உடனே சவுந்தர்யாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நீரஜ் உள்ளிட்டோர் கொண்டு சென்றனர். அங்கு சவுந்தர்யாவுக்கு வென்டிலேட்டர் மற்றும் நவீன மருத்துவம் மூலமாக டாக்டர்கள் சிகிச்சை அளித்து பார்த்தார்கள். ஆனால் அவர் ஏற்கனவே உயிர் இழந்தது தெரியவந்தது. இதையடுத்து, சவுந்தர்யா இறந்து விட்டதாக டாக்டர்களும் உறுதி செய்தார்கள். இதுபற்றி ஐகிரவுண்டு போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பவுரிங் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டு சவுந்தர்யா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. ஆனால் அவரது தற்ெகாலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
கடிதம் சிக்கவில்லை
அதே நேரத்தில் நீரஜ், சவுந்தர்யா வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது சவுந்தர்யா தற்கொலை செய்வதற்கு முன்பாக எந்த ஒரு கடிதமும் எழுதி வைக்கவில்லை என்று தெரியவந்தது. வீட்டில் இருக்கும்போது தனது 9 மாத கைக்குழந்தையை, வீட்டு வேலைக்கார மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு, சவுந்தர்யா தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் கடைசியாக யாருடன் பேசினார், அவரது செல்போனில் இருந்து யாருக்காவது தகவல் அனுப்பி வைத்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் வேலைக்காரா்கள், சவுந்தர்யாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளனர்.
கழுத்தில் மட்டும் காயம்
இந்த நிலையில், சவுந்தர்யாவின் உடல் பிரேத பரிசோதனை நடந்த பவுரிங் ஆஸ்பத்திரிக்கு எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர்களும், மந்திாிகளுமான கோவிந்த் கார்ஜோள், மாதுசாமி உள்ளிட்டோர் சென்றாா்கள். பிரேத பரிசோதனை குறித்து டாக்டர்களிடம் அவர்கள் கேட்டு அறிந்து கொண்டனர். சவுந்தர்யாவின் உடல் பெங்களூரு வடக்கு மண்டல தாசில்தார் முன்னிலையில் டாக்டர் சதீஸ் தலைமையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
அந்த பரிசோதனையில் அவரது கழுத்தில் மட்டும் காயம் இருப்பது தொியவந்தது. தூக்குப்போட்டு தொங்கியதால் கழுத்தில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் டாக்டர்கள் கருதுகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் சவுந்தர்யாவின் உடல் சோழதேவனஹள்ளி அருகே அப்பிகெரேயில் உள்ள நீரஜுக்கு சொந்தமான பண்ணை வீட்டுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.
கண் கலங்கிய எடியூரப்பா
இதையடுத்து, பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருந்து அப்பிகெரேயில் இருக்கும் பண்ணை வீட்டுக்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரும் சென்றார்கள். தனது பேத்தியின் உடலை பார்த்து எடியூரப்பா கண் கலங்கினார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறினார்கள். சவுந்தர்யாவின் உடலுக்கு, அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய நபர்கள் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் இருந்து நேற்று இரவு சவுந்தர்யாவின் தந்தை பெங்களூருவுக்கு வந்ததும், சவுந்தர்யாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
காரணம் என்ன?
இதற்கிடையில், தனது மனைவி சாவு குறித்து ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் நீரஜ் புகார் அளித்தார். அதன்பேரில், இயற்கைக்கு மாறான சாவு என்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை அல்லது மனதளவில் பாதிப்பு காரணமாக சவுந்தர்யா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். அதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எடியூரப்பாவின் பேத்தியும், டாக்டருமான சவுந்தர்யா தற்கொலை செய்த சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
எடியூரப்பாவுக்கு ஆறுதல்
எடியூரப்பா தனது பேத்தியான சவுந்தர்யா மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். பேத்தியின் திருமணத்தை கூட விமரிசையாக எடியூரப்பா நடத்தி இருந்தார். இதையடுத்து, பேத்தியை இழந்த எடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் மந்திரிகள் ஆறுதல் கூறினார்கள்.
+ There are no comments
Add yours