சேலம்:
சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவியர் 9 பேருக்கு அரசுப் பள்ளி மாணவியருக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது. இதற்காக மாணவிகள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டபுரத்தில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி 1965-ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக துவக்கப்பட்டது. 2000-ல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 1884 மாணவியர் பயின்று வருகின்றனர். ஆண்டுதோறும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் இப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் 330 மாணவியர் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். நீட் தேர்வில் வென்ற இப்பள்ளி மாணவியருக்கு மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் ஜலகண்டபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 9 பேருக்கு மருத்துவ கல்விக்கான இடம் கிடைத்துள்ளது. ஒருவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கு வந்த மாணவியருக்கு தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் இணைப்பு வழங்கி உற்சாகப்படுத்தினார்கள். மாணவியர் தங்களுக்கு அரசு வழங்கிய 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் கொடுத்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours