நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! சென்னையில் பணப்பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைப்பு..!!

Estimated read time 0 min read

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பணப்பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது, கண்காணிப்பை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது, வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்களை கண்காணிப்பது, பறக்கும் படை அமைத்தல், வாக்குச்சாவடிகள், மின்னணு இயந்திரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்தல், பதற்றம் நிறைந்த சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிமீறல்கள், முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிப்பதற்கான எண்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னையில் பணப்பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக 37 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் 24 மணி நேரமும் வாகன சோதனைகளை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை பறக்கும் படை வாகன சோதனை மேற்கொள்ளும். அப்போது பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யும்போது வீடியோ எடுத்து அதன் விவரங்களை உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கான ஆவணத்தை சமர்ப்பித்தால் வியாபாரிகளிடம் பணம் திருப்பி தரப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours