அன்புமணி சொன்னப்போ கோபம் வரலியே.. நயினார் சொன்னது சரிதான்.. போட்டுத்தாக்கும் புகழேந்தி..!

Estimated read time 0 min read

சென்னை :

அன்புமணி ராமதாஸ் சர்ச்சைக்குரிய வார்த்தையை சொல்லிய போது வராத கோபம், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இதே அர்த்தத்தில் உள்ள வார்த்தையை கூறிய போது வராத கோபம் இப்போது ஏன் வருகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ள அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான புகழேந்தி, அதிமுக குறித்து நயினார் நாகேந்திரன் கூறியது முற்றிலும் உண்மை தான் என கூறியுள்ளார்.


தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பாஜக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன் பேசினார்.

அப்போது எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜக தொடர்ந்து தமிழகத்திற்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருவதாகவும் அதிமுகவில் சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேசக்கூடிய ஒருவர் கூட இல்லை என கூறினார்.

நயினார் நாகேந்திரன் சர்ச்சை

அதிமுகவில் ஆண்மை உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என என நாயனார் நாகேந்திரன் பேசியது கட்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிமுக தொண்டர்கள் நயினார் நாகேந்திரன் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். #நைனார்_மன்னிப்புகேள் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. மேலும் பாஜக அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டுமெனவும் தொண்டர்கள் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.

பாஜக அண்ணாமலை விளக்கம்

இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் பேச்சு குறித்து அவரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலையும் விளக்கம் அளித்துள்ளனர். நயினாரின் பேச்சு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசிவிட்டதாகவும் நயினார் நாகேந்திரன் பேசியபோது ஒரு வார்த்தை தவறாக வந்துவிட்டதாகவும் இதை பெரிது படுத்த வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் ஓபிஎஸ்சிடம் பேச முடியவில்லை எனவும், எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து பேசியுள்ளதாகவும், தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியதாக அண்ணாமலை தெரிவித்தார்.

நயினார் கூறியது உண்மைதான்

இதுகுறித்து பேசிய புகழேந்தி, அதிமுக முழுக்க முழுக்க பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது எனவும் நயினார் நாகேந்திரன் கூறியதில் என்ன தவறு இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவினருக்கு ஆண்மை இல்லை என நயினார் நாகேந்திரன் கூறவில்லை எனவும் ஆண்மையோடு பேசுவதற்கு யாரும் இல்லை தான் என அவர் கூறியதாகவும் தெரிவித்தார். ஒருவேளை பாஜகவுக்கு எதிராக யாராவது குரல் எழுப்பி பேசினாலும் அவர்களையும் தன்னைப் போல அன்வர் ராஜாவை போல கட்சியை விட்டு உடனடியாக நீக்கும் நிலையில்தான் அதிமுக தலைமை உள்ளது எனவும், ஓபிஎஸ் இபிஎஸ் தங்கள் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தாலே கட்சி மீட்கப்பட்டு விடும் எனக் கூறினார்.

கர்நாடகா புகழேந்தி

அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது கர்நாடக மாநில செயலாளராக இருந்தவர் புகழேந்தி. ஜெயலலிதா சசிகலா சிறையில் இருந்தபோது அனைத்தையும் கவனித்துக் கொண்டவர் தலைமைக்கு மிகவும் விசுவாசமாகவும் நெருக்கமாகவும் இருந்தவர். அமமுக சென்று மீண்டும் அதிமுகவில் இணைந்த அவர் அதே வேகத்திலேயே கட்சி செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதிமுக குறித்த அன்புமணி ராமதாஸின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அடுத்த நாளே கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். தொடர்ந்து அதிமுக குறித்து பலத்த விமர்சனங்களை முன்வைத்து வரும் அவர் தேர்தல் ஆணையத்தில் நீதிமன்றங்களில் அதிமுகவுக்கு எதிராக பல புகார்களை அடுக்கி தலைவலியை கொடுத்துக் கொண்டிருப்பவர்.

அன்புமணி பேச்சு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவினரை சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்த போது வராத கோபம், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இதே வார்த்தையை பயன்படுத்திய போது வராத கோபம் தற்போது வருவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள புகழேந்தி இதற்கு முன் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். தன்னைப் பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் கூறியது உண்மைதான் எனவும் அதிமுகவில் ஆண்மைத் தன்மையுடன் சட்டமன்றத்தில் பேச யாருக்கும் தகுதி இல்லை எனவும், தமிழ் மொழி பிரச்சினைக்காக எத்தனை முறை அதிமுகவினர் குரல் கொடுத்துள்ளார்கள் என கேள்வி எழுப்பினார்.

திமுக அரசு

மேலும் இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எம்ஜிஆர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடாத நிலையில் அதனை திமுக அரசு அறிவித்து உள்ளது எனவும் அதைப் பாராட்ட கூட எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியில் இருப்பவர்களுக்கு மனம் வரவில்லையா என கேள்வி எழுப்பிய அவர் அதிமுகவில் தற்போதுள்ள இரு தலைவர்களும் தங்களது கட்சியை முழுக்க முழுக்க பாஜகவிடம் அடகு வைத்து விட்டதாகவும், அவர்கள் இருவரும் பதவியை ராஜினாமா செய்தால் தான் கட்சி மீளும் எனக் கூறிய அவர், அதிமுக தொண்டர்கள் தலைமை மேலேயே கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், இருவரும் இந்த விவகாரம் தொடர்பாக வாயே திறக்கமாட்டார்கள் எனவும் கூறினார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours