டெல்லி:
இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இது குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வாளர் சுபாஷ் சாலுங்கே முக்கிய எச்சரிக்கையைக் கொடுத்துள்ளார். இந்தியாவில் ஓமிக்ரான் பரவலுக்குப் பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 2 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,55,874 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா ஆக்டிவ் கேஸ்களும் 15%ஆக உள்ளது. ஒரே நாளில் 614 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்பு 4.90 லட்சமாகப் பதிவாகியுள்ளது.
மின்னல் வேகம்
இந்தியாவில் முதலில் வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு மட்டுமே ஓமிக்ரான் கண்டறியப்பட்டு வந்தது. அப்படி தான் கர்நாடகா, டெல்லி மாகாரஷ்டிரா மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் பலருக்கும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. இருப்பினும், இப்போது வெளிநாட்டில் செல்லாத மற்றும் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுடன் தொடர்பில் இல்லாத நபர்களுக்கும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தான் வைரஸ் பாதிப்பு கடந்த சில வாரங்களாக மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
சமூகப் பரவல்
ஓமிக்ரான் இந்தியாவில் சமூகப் பரவலாக மாறிவிட்டது என்றும் நாட்டில் உள்ள பல்வேறு பெருநகரங்களில் ஓமிக்ரான் கொரோனா தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் மத்திய அரசின் INSACOG குழு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. மெட்ரோ நகரங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் போதிலும் இதனால் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவோரின் எண்ணிக்கை மற்றும் ஐசியு சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை ஆபத்தான நிலைக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேக்சின் முக்கியம்
அதாவது ஓமிக்ரான் பரவல் மிக வேகமாகப் பரவினாலும் கூட வேக்சின் போட்டுக் கொண்டவர்கள் மத்தியில் அது லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதாக INSACOG குழு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே நாட்டின் முக்கிய பெருநகரங்களான டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் வைரஸ் பரவல் குறையத் தொடங்கியுள்ளது. இது நல்ல விஷயமாகப் பார்க்கப்பட்டாலும் கூட 2ஆம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கிராமங்களில்
இருப்பினும், இந்த நிலை விரைவில் மாறக்கூடும் என்று ஐசிஎம்ஆர் ஆய்வாளரும் கோவிட் டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினருமான டாக்டர் சுபாஷ் சாலுங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்த நிலைமை விரைவில் மாறக்கூடும் ஏனென்றால் ஓமிக்ரான் அலை இப்போது மற்ற நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்குப் பரவுகிறது. பல்வேறு மாநிலங்களிலும் அடுத்த 8 முதல் 10 வாரங்களில் வைரஸ் பாதிப்பு உச்சம் தொடும்
எச்சரிக்கை தேவை
நாட்டின் பெருநகரங்களில் தற்போது உறுதி செய்யப்படும் கொரோனா கேஸ்கள் பனிப்பாறையின் முனையைப் போன்றது. பதிவு செய்யப்படும் கொரோனா பாதிப்பைக் காட்டிலும் உண்மையான பாதிப்பு மிக அதிகமாக இருக்கலாம். எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 2ஆம் அலையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய ஓமிக்காரன் கொரோனாவும் இன்னும் மக்களிடையே பரவிக் கொண்டிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வழிகாட்டுதல்கள்
கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் முறையாக வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பொது இடங்களில் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் கடைப்பிடிப்பதன் மூலமும் வைரஸ் பாதிப்பை தடுக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்,
+ There are no comments
Add yours