சென்னை:
தஞ்சை மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி ஆசிரியர்கள் சிலர் அந்த மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக ஒரு பக்கம் கூறப்படுகிறது.
இந்த மாணவிக்கு ஹாஸ்டல் வார்டன் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், அறைகளை சுத்தம் செய்ய சொல்லி கொடுமை படுத்தியதாலும் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் மாணவி தஞ்சாவூர் மாஜிஸ்டிரேட்டிடம் கொடுத்த வாக்குமூலத்தில் மத மாற்றம் குறித்து எதுவும் சொல்லவில்லை. இந்த மாணவி பலியான விவகாரத்தில் ஹாஸ்டல் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவி மரணம்
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் தமிழ்நாடு பாஜக தொடர்ந்து தீவிரமாக கருத்து தெரிவித்து வருகிறது. மாணவியை மத மாற்றம் செய்ய சொல்லி பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பே புகார் அளித்து இருந்தார். இதில் மாணவியை மதம் மாற கூறி வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பாஜகவினர் தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளி பிரியாவிடம் புகார் மனு அளித்தனர்
தஞ்சை மாணவி
ஆனால் இந்த புகாரில் தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளி பிரியா நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் வழக்கின் போக்கை திசை திருப்புகிறார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை புகார் அளித்துள்ளார். தஞ்சை மாணவி வழக்கை மதுரை ஹைகோர்ட் நீதிபதி ஜி.ஆர் சுவாமி நாதன் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து இருக்கிறார். இதில் மாணவியின் வீடியோவை எடுத்த நபரை விசாரணைக்கு ஆஜராகும் படி நீதிபதி ஜி.ஆர் சுவாமி நாதன் நேற்று விசாரணையில் உத்தரவிட்டார்.
மத மாற்றம்
இந்த நிலையில் கட்டாய மதமாற்றத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி தமிழ்நாடு பாஜக சார்பாக குஷ்பு இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினார். பாஜகவினர் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்று மீண்டும் வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பாக போராட்டம் நடத்தப்பட உள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது.
பாஜக போராட்டம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடக்க உள்ளது. பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தஞ்சை மாணவி வழக்கை ஆளும் அரசு திசை திருப்ப பார்க்கிறது. இதில் உடனே நீதி விசாரணை நடத்த வேண்டும். வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து பாஜக சார்பாக இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.
+ There are no comments
Add yours