சென்னை:
ஒரு சில மாதங்களுக்கு முன் பேஸ்புக்கை தூக்கி சாப்பிட்டுவிடும் என்று கருதப்பட்ட.. சமூக வலைத்தளங்களில் புரட்சியை ஏற்படுத்தும் என்று ஆருடம் கூறப்பட்ட கிளப் ஹவுஸ் ஆப் தற்போது மிக மோசமான நிலையை தமிழ்நாட்டில் எட்டி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கிளப் ஹவுசில் பேசப்பட்ட விவாதம் ஒன்றின் வீடியோ இணையம் முழுக்க வைரலானது. சில ஆண்கள், பெண்கள் இடம்பெற்று இருந்த அந்த குழுவில் இஸ்லாமிய பெண்களை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்ய வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. தீவிர இந்து வலதுசாரி கும்பல் ஒன்றால் இயக்கப்பட்ட அந்த குழுவில் இஸ்லாமிய பெண்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம், எப்படி எல்லாம் அவர்களை கொடுமைப்படுத்தலாம் என்று இந்த ஹவுசில் விவாதிக்கப்பட்டது. சில பெண்களும் இந்த ஹவுசில் இடம்பெற்று இருந்தனர்.. இவர்களின் விவாதம் இணையம் முழுக்க சர்ச்சையான நிலையில் இந்த ஹவுசில் இடம்பெற்று இருந்த 6க்கும் மேற்பட்டோர் தற்போது மும்பை போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் கிளப் ஹவுஸ்
வடஇந்தியர்கள் இடம்பெற்று இருந்த இந்த கிளப் ஹவுசில் பேசப்பட்ட விஷயங்கள் இணையத்தையே உலுக்கியது. வடஇந்திய கிளப் ஹவுஸ்கள் பல இப்படி மத ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் வன்மத்தை பரப்பி வரும் நிலையில்தான்.. தமிழ்நாட்டில் கிளப் ஹவுஸ்கள் எப்படி இருக்கின்றன. அதன் நிலைமை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக ஒரு விசிட் அடித்தோம். ஒவ்வொரு ஹவுஸும்.. ஒவ்வொரு ரகம் என்று சொல்லும் அளவிற்கு ஏகப்பட்ட ஹவுஸ்கள் நிரம்பி வழிந்தன.
அதிர்ச்சி
கடந்த சில மாதங்களுக்கு முன் கிளப் ஹவுஸ் தமிழ்நாட்டில் வைரலான சமயங்களில் நிறைய பாடல் பாடும் குழுக்கள் இருந்தன. அதேபோல் நிறைய விவாத மேடைகள், ஆக்கபூர்வமான குழுக்கள் இருந்தன. ஆனால் இப்போதோ கிளப் ஹவுஸ்களில் இருக்கும் 90 சதவிகித குழுக்கள் பாலியல் தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளும் குழுக்கள்தான். மீதம் இருக்கும் குழுக்களில் பெரும்பாலானவை பொய்யான செய்திகளை பரப்பும் “டாக்சிக்” குழுக்கள் அல்லது மத வெறியை தூண்டும் ஹவுஸ்கள்.
பாலியல் குழுக்கள்
இரவு முழுக்க பாலியல் ரீதியாக சாட் செய்வது, அதீத பாலியல் கற்பனைகளை பேசுவது, பெண்களை பொதுவாக குழுவில் முறையற்ற வகையில் பேசுவது என்று பல விதமான குழுக்கள் கிளப் ஹவுஸ் முழுக்க நிறைந்த கிடக்கின்றன. சில குழுக்களின் பெயரே எழுத்தில் அச்சடிக்க முடியாத அளவிற்கு மிக மோசமாக அமைந்து உள்ளது. ஆக்கபூர்வமான பாலியல் உரையாடலில் தவறு இல்லை. ஆனால் கொஞ்சமும் தொடர்பு இல்லாத பலர் ஒரு குழுவாக சேர்ந்து பேசுவது, பெண்களிடம் அத்துமீறும் வகையில் பேசுவது கிளப் ஹவுஸ்களில் அதிகரித்து உள்ளது.
இரவு நேர சாட்ஸ்
பொதுவாக இது போன்ற கிளப் ஹவுஸ்கள் இரவு நேரத்தில்தான் திறக்கப்படும். ஒரு ஹவுஸ் 9 மணிக்கு திறக்கப்பட்டால் அதில் ஒவ்வொரு நபராக இணைவார்கள். மாறி மாறி மைக் பகிரப்பட்டு பாலியல் ரீதியான சாட்ஸ் விடிய விடிய பொதுவில் நடக்கும். யார் வேண்டுமானாலும் இதில் பேசுவதை கேட்க முடியும். அட்மின் அனுமதித்தால் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேச முடியும். ஒரு பெண்ணை குறிப்பிட்டு இன்னொரு ஆண் பாலியல் ரீதியாக பேசுவதுதான் பெரும்பாலும் இந்த ஹவுஸ்களில் இருக்கும் தீம்.
வக்கிரம்
அதாவது அதே ஹவுசில் இருக்கும் ஒரு பெண்ணை சுட்டிக்காட்டி.. அவரை பற்றிய பாலியல் ரீதியான விருப்பங்களை இந்த ஆண் கூறுவார்.. அதற்கு இந்த பெண்ணும் பதில் சொல்வார்… இதை மொத்த குழுவும் கேட்டுக்கொண்டு இருக்கும். ஜென் இசட் ஜெனரேஷன் பாலியல் ரீதியான சுதந்திரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்று இதை கூறலாம். இரண்டு தரப்பும் முழு consent உடன்தான் இந்த சாட்டிங்கை செய்கிறார்கள் என்றும் கூட எடுத்துக்கொள்ளலாம்..
ஜாதி மதம்
ஆனால் அதற்கும் ஒரு வரையறை இன்றி அதீதமாக எல்லை மீறும் போக்குகள் கிளப் ஹவுஸ்களில் அதிகரித்துள்ளது. உள்ளே அடக்கி வைத்து இருந்த abusive குணங்களை கொட்ட கூடிய இடமாக கிளப் ஹவுஸ் உருவெடுத்து வருகின்றது அல்லது உருவெடுத்திவிட்டது. சரி இளசுகளின் குழுக்கள்தான் இப்படி இருக்கிறது என்றால் சாதி, மத ரீதியாக மோதலை உண்டாக்கும் குழுக்களும் இருக்கின்றன. ஒரு மதம்தான் என்று இல்லாமல் பல க்ளோஸ்ட் குழுக்கள் இப்படி கிளப் ஹவுசில் இருக்கின்றன. ஒரு மத கூட்டத்தை, ஜாதி கூட்டத்தை பொதுவில் நடத்தி விஷமத்தை பேசினால் அது எவ்வளவு பெரிய சர்ச்சையாகும்..
pseudoscience குழுக்கள்
ஆனால் அப்படி எந்த சர்ச்சையும் ஆகாமல் பலர் இந்த கிளப் ஹவுஸ்களில் மத ரீதியான, ஜாதி ரீதியான விஷமத்தை பகிர்ந்து வருகிறார்கள். பல தீவிர வலது சாரி (ஒரு மதம் என்றில்லை) குழுக்கள் இங்கேதான் குத்த வைத்து இருக்கிறார்கள். இது போக பல pseudoscience குழுக்களும் இங்கே இயங்கி வருகின்றன. அதாவது தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் செய்யும் குழுக்கள், கொரோனா என்பதே ஒரு சதி என்ற வகையில் பேசும் குழுக்கள், தடுப்பூசி போட்டால் நமக்கு குழந்தை பிறக்காது என்றெல்லாம் பொய்யாக பேசும் குழுக்களும் கிளப் ஹவுஸ்களில் நிரம்பி வழிகின்றன.
நல்ல குழுக்கள்
போதிய regulations முறைகள் இல்லாத காரணத்தாலும், எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத காரணத்தாலும் இந்த குழுக்கள் தொடர்ந்து அத்துமீறி வருகின்றன. ஆனால் இன்னொரு பக்கம் சில நல்ல ஆக்கப்பூர்வமான குழுக்களும் இங்கு உள்ளன. ஆக்கபூர்வமான விவாதங்கள் பல இங்கு நடக்கின்றன. ஆனால் இதன் எண்ணிக்கை மிக மிக குறைவு. உடனே கிளப் ஹவுஸ்களுக்கு என்று குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை அந்த செயலியை நடத்துபவர்களாவது கொண்டு வர வேண்டும்.. அல்லது அரசின் சைபர் கிரைம் பிரிவாது இங்கு நடக்கும் அத்துமீறல்களை கண்காணிக்க வேண்டும்.
+ There are no comments
Add yours