ஈரோடு:
ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது தண்டவாளத்தில் விழ முயன்ற பயணியை மின்னல் வேகத்தில் செயல்பட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். வடமாநிலத்தை சேந்தவர் அசோக் தாஸ் (32). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறை கிடைக்கும் நாட்களில் இவர் சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பி வருவது வழக்கம்.
வடமாநிலத்தை சேர்ந்தவர்
சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊருக்கு சென்று இருந்தார் அசோக் தாஸ். விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்புவதற்காக நேற்று முன்தினம் செகந்திராபாத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
ரயில் நிலையத்தை விட்டு புறப்பட்ட ரயில்
நேற்று இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்தது. ஆனால் அசோக் தாஸ் அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததால் ரயில் ஈரோடு வந்தது அவருக்கு தெரியவில்லை. அவர் வந்த ரயிலும் சிறிது நேரம் நின்று விட்டு திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டது. திடீரென கண்விழித்த அசோக் தாஸ் ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை விட்டு மெதுவாக செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மின்னல் வேகத்தில் காப்பாற்றினார்கள்
இதனால் பதறிப்போன அவர் பேக்கை எடுத்துக் கொண்டு ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழும் நிலையில் தடுமாறினார். அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த தலைமைக் காவலர்கள் பழனிசாமி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் இதனை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். மின்னல் வேகத்தில் செயல்பட்ட காவலர்கள் இருவரும் தண்டவாளத்தில் உள்ளே விழ முயன்ற அசோக்தாசை பிடித்து இழுத்து காப்பாற்றினர்கள்.
குவியும் பாராட்டு
‘ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றால் இதுதான் நிலைமை’ என்று அசோக் தாஸுக்கு அறிவுரை கொடுத்து அனுப்பி வைத்தனர். ஒரு நிமிடத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டதால் பயணியின் உயிர் காப்ற்றப்பட்டுள்ளது. இந்த காவலர்கள் பயணியை காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. துரிதமாக செயல்பட்டு பயணியை காப்பாற்றிய காவலர்களை காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
+ There are no comments
Add yours