சேலம்:
ஓமலூர் அருகே வீட்டில் கேஸ் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் வேலைக்கு சென்றுள்ளார். அப்பொழுது வீட்டின் உள்ளிருந்து கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்து விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ஓமலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று வீட்டில் இருந்த சிலிண்டர் பாதுகாப்புடன் மீட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பால குட்டப்பட்டி பகுதியில் வசிப்பவர் முத்து. இவர் நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் மட்டுமே தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் சமைத்து சாப்பிட்டுவிட்டு கேஸ் அடுப்பையும் சிலிண்டரையும் ஆப் செய்யாமல் வீட்டைப் பூட்டிவிட்டு வழக்கம் போல நெசவு தொழிலுக்கு வெளியில் சென்றுவிட்டார். இந்நிலையில் அப்பகுதியில் கேஸ் கசியும் நாற்றம் அக்கம்பக்கம் உள்ள பொது மக்களுக்கு தெரிந்துள்ளது. எங்கிருந்து கேஸ் கசிகிறது என்று தேடி பார்த்துள்ளனர். அப்போது முத்து என்பவருடைய வீட்டிலிருந்து கேஸ் கசிவு வருவது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அக்கம் பக்கம் உள்ள பொது மக்கள் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தங்கள் வீடுகளுக்குள் செல்லாமல் வெளியிலேயே இருந்துள்ளனர்.
இதனை அடுத்து கேஸ் கசிவால் பெரும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் முத்து வீட்டிற்கு செல்லும் மின் இணைப்பை அப்பகுதி இளைஞர்கள் துண்டித்துள்ளனர். பின்னர் ஓமலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஓமலூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் அல்லிமுத்து (போக்குவரத்து), தர்மலிங்கம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த சிலிண்டரை ஆப் செய்து சிலிண்டரையும் அடுப்பையும் பத்திரமாக வெளியில் எடுத்து வந்தனர். அதன் பிறகே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்து தங்கள் வீடுகளுக்குள் சென்றனர். தீயணைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வீட்டிலிருந்து கேஸ் கசிவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்படுத்திய நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று பாதுகாப்புடன் சிலிண்டரை மீட்டது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியது.
+ There are no comments
Add yours