தனித்து களமிறங்கும் தேமுதிக! செலவுக்கு திணறும் நிர்வாகிகள்! பிசுபிசுக்கும் தேர்தல் பணிகள்..!

Estimated read time 0 min read

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என ஏற்கனவே விஜயகாந்த் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் செலவை எண்ணி பல நிர்வாகிகள் தவித்து வருகிறார்களாம். கூட்டணி விவகாரத்தில் கட்சி மேலிடம் சிறிது பொறுமை காத்திருக்க வேண்டுமோ என அவர்களுக்குள் அங்கலாய்த்துக் கொள்கிறார்களாம். இதனால் தேமுதிக முகாமில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் ஆமை வேகத்தில் இருப்பதாக கூறுகிறாகள் விவரமறிந்தவர்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, என ஒரு அணியாகவும் அதிமுக, பாஜக ஒரு அணியாகவும் தேர்தலில் களம் காண்கின்றன. பாமகவும், தேமுதிகவும் தனித்து போட்டியிடும் என அந்த இரண்டு கட்சிகளின் தலைமையும் ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதற்கேற்ப தனித்து போட்டியிடுவதற்கான முன்னேற்பாடுகளை பாமக தீவிரமாக செய்து வருகிறது.

தேமுதிக நிலை

இதனிடையே தேமுதிக முகாமை பொறுத்தவரை தேர்தல் பணிகளில் சுணக்கம் காணப்படுவதாகவும் இதற்கு காரணம் தேர்தல் செலவு விவகாரம் தான் எனவும் கூறுகிறார்கள் உள் விவரமறிந்தவர்கள். ஏற்கனவே பணம் படைத்த பல முக்கியப் பிரமுகர்கள் தேமுதிகவிலிருந்து விலகிச் சென்றுவிட்டதால், இப்போது இருக்கும் நிர்வாகிகள் தேர்தல் செலவுகளுக்கு திணறும் நிலை உருவாகியுள்ளதாம். ஒரு ஒன்றிய வார்டு கவுன்சிலருக்கே பல லட்சங்கள் செய்ய வேண்டிய சூழலில் நகராட்சி, மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கான தேர்தலில் செலவுத் தொகையை பற்றி சொல்லவே தேவையில்லை.

மேலிடம் கொடுக்கும்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்காக கட்சி மேலிடத்தில் இருந்து ஏதேனும் செலவுக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பல நிர்வாகிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் தோல்வி, 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி, 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல் தோல்வி, 2021 சட்டமன்றத் தேர்தல் தோல்வி என அனைத்து தேர்தல்களிலும் கூட்டணியில் கோட்டை விட்ட காரணத்தால் தேமுதிக சரிவை சந்தித்தது கவனிக்கத்தக்கது.

படு உற்சாகம்

இதனிடையே தேமுதிகவை போலவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக படு உற்சாகமாக தேர்தல் பணிகளை ஆற்றி வருகிறது. தொண்டர்களையும், நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் அனல் பறக்கும் கடிதங்கள் மூலமும் அறிக்கைள் மூலமும் தேர்தல் களத்தை நோக்கி அழைத்து வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ் என்பது கவனிக்கத்தக்கது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours