யஷ்ஷின் ‘கேஜிஎஃப் 2’ படத்துடன் விஜய்யின் ‘பீஸ்ட்’ மோதுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலால் பெரிய நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. கடந்த வருடம் வெளியாகவிருந்த யஷ்ஷின் ‘கேஜிஎஃப் 2’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘கேஜிஎஃப் 2’ உள்ளது. இந்த நிலையில், ‘கேஜிஎஃப் 2’ படத்துடன் விஜய்யின் ‘பீஸ்ட்’ மோதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த புத்தாண்டையொட்டி பீஸ்ட் புதிய போஸ்டரை வெளியிட்ட விஜய் ஏப்ரல் வெளியீடு என்று உறுதி செய்திருந்தார். இந்த நிலையில், ‘பீஸ்ட்’ படமும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது. ‘கேஜிஎஃப் 2’ படமும் அதே நாளில் வெளியாவதால் ‘பீஸ்ட்’ படத்தின் வசூலை தமிழகம் தவிர்த்து தென்னிந்திய மாநிலங்களில் பாதிக்கும் என்றும், ‘கேஜிஃப் 2’ படத்தின் வசூலை ‘பீஸ்ட்’ தமிழகத்தில் தடுத்து நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதேநாளில் அமீர்கானின் ‘லால் சிங் சட்டா’வும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours