சென்னை:
சென்னையில் நேற்று திடீரென மழை பெய்த நிலையில் தற்போதும் மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.. இதனிடையே இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை பொழியும் என்று வானிலை மையமும் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் முழுவதும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது… ஒருசில மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவே இருந்தாலும், இந்த ஆண்டு இயல்பான அளவை விட மழை அதிகமாகவே பெய்திருந்தது..
டிசம்பர் மாதம் துவங்கியதுமே மழை படிப்படியாக குறைய ஆரம்பித்தது.. ஆனால், இரவு நேரங்களில் லேசான பனிப்பொழிவு துவங்கியது.. எதிர்பார்த்த அளவுக்கு குளிரும் காணப்படவில்லை..
குளிர்ச்சி
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகாலை நேரங்களில் குளிர்ச்சி நிலவியதே தவிர, குளிர் பாதிப்பு குறைவாகவே காணப்பட்டது. இப்போது தை மாதமே துவங்கிவிட்டது.. பனிப்பொழி குறைந்து வந்த நிலையில், மாறாக சென்னையில் மழை ஆரம்பமாகிவிட்டது.. கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகாலையில் பனிப்பொழிவு குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது.
சென்னை
நேற்று அதிகாலை திடீரென மழை பெய்தது… கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை மையம் அறிவித்து இருந்த நிலையில், நேற்று காலை திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
இன்று அதிகாலை
குறிப்பாக தண்டையார் பேட்டை, ராயபுரம், பாரிமுனை, அண்ணா சாலை, சேப்பாக்கம், வள்ளூவர் கோட்டம், கோடம்பாக்கம், அசோக் நகர், கிண்டி, அடையாறு உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதியில் மழை விட்டு விட்டு பெய்தது.. இதேபோல் பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.. அதிகாலை துவங்கிய மழை பிற்பகல் வரை நீடித்தது… இதனிடையே, இன்றும், நாளையும் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்றும் நாளையும் மழை
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் உள்ளதாவது: தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை, 29 டிகிரி செல்சியஸாக பதிவாகும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். வரும், 19ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours