மதுரை:
மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறந்த காளைக்கு கார் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பிலும், சிறந்த மாடுபிடி வீரருக்கு பைக் சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி சார்பிலும் வழங்கப்படவுள்ளது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றுள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
வழக்கமாக ஜல்லிக்கட்டுப்போட்டியைக் காண பல்லாயிரக்கணக்கானோர் அவனியாபுரத்திற்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் யாருமின்றி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடம் வெறிச்சோடி காணப்படுகிறது.
என்னென்ன ஏற்பாடுகள்
மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லாத சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் கலந்து கொள்ள கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான அனுமதி சீட்டுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீரர்கள் உறுதிமொழி
போட்டி தொடங்கும் முன்பாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டுப்போட்டி தொடங்கியது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர், ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெறும். போட்டியானது மாலை 3மணிவரை நடைபெறவுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
அவசரகால மருத்துவ தேவைக்காக 10 மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் கார் பரிசு
போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன. தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர் ,குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த காளைக்கு கார் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பிலும், சிறந்த மாடுபிடி வீரருக்கு பைக் சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி சார்பிலும் வழங்கப்படவுள்ளது.
+ There are no comments
Add yours