ஜிபிஎஸ் கருவி வசதியுடன் காவல்துறைக்கு 106 புதிய வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

Estimated read time 1 min read

சென்னை:

காவல்துறையின் ரோந்து பணிக்கு ஜிபிஎஸ் கருவி வசதியுடன் 106 வாகனங்களை வழங்கிடும் விதமாக, ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களின் பயன்பாட்டிற்காக 20 வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காவல்துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அனைத்து காவல் ஆணையரகங்களின் கீழ் செயல்படும் காவல் நிலையங்களுக்கு (சென்னை தவிர) தலா ஒரு நான்கு சக்கர ரோந்து வாகனம் என மொத்தம் 106 ரோந்து வாகனங்கள் 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், காவல்துறையின் ரோந்து பணிக்கு கூடுதல் உபகரணங்களுடன் ரூ.9 கோடியே 76 லட்சத்து 67 ஆயிரத்து 340 மதிப்பீட்டிலான 106 மகிந்திரா பொலிரோ நியோ வாகனங்களை வழங்கிடும் விதமாக, முதற்கட்டமாக ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களின் பயன்பாட்டிற்காக 20 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த காவல் ரோந்து வாகனத்தில் பொது அறிவிப்பு செய்யும் ஒலிபெருக்கி மற்றும் ரோந்து வாகனத்தை தொலைவில் இருந்து அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் மூன்று வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த வாகனத்தின் நகர்வினை அறியவும், அவசர உதவி தேவைப்படும் இடங்களுக்கு செல்லவும் அருகில் உள்ள ரோந்து வாகனத்திற்கு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கட்டளையினை அளிக்கவும் முடியும். இதன்மூலம் பொதுமக்களிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அவசர உதவி அழைப்புகளுக்கு குறைந்தபட்ச கால அவகாசத்தில் சம்பவ நிகழ்விடங்களுக்கு செல்ல முடியும்.

நிகழ்ச்சியின்போது உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன், தாம்பரம் ஆணையர் மு.ரவி, ஆவடி ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் உடனிருந்தனர்.

– வேலன்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours