புதுக்கோட்டை:
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியுள்ளது. சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கி பரிசுகளைத் தட்டிச்சென்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து போட்டி நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் உள்ளூரைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாடுபிடி வீரர்களும் பார்வையாளர்களும் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க முடியும். காளைகளுடன் உரிமையாளர், உதவியாளர் ஒருவர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
வாடிவாசல்
தச்சங்குறிச்சியில் அடைக்கல அன்னை ஆலயம் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும். தற்போது அனுமதி தாமதமாக கிடைத்ததால் ஜல்லிக்கட்டிற்கான வாடிவாசல் மற்றும் தடுப்புகள் அமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பெயர் பதிவு செய்தனர்.
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், திருச்சி, தஞ்சாவூர் உள்பட பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் வந்து பெயர் பதிவு செய்தனர். அப்போது கொரோனா 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்து அனுமதி வழங்கினர். இதேபோல காளைகளின் உரிமையாளர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டன.
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றுள்ளன. அரசின் வழிகாட்டு நடைமுறைகளை கடைப்பிடிக்க அதிகாரிகளும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.கந்தர்வகோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் முன்பதிவு
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இணையதள முன்பதிவு ஆனது கடந்த 11ஆம் தேதி முதல் தொடங்கி நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைனில் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது இதில் 4534 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.
+ There are no comments
Add yours