நாடாளுமன்றத்தில் கொரோனா பரவல்; பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரம்..!

Estimated read time 0 min read

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே நடந்து முடிந்தது.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஆயிரத்து 409  பணியாளர்களுக்கு ஜனவரி 4ந்தேதி முதல் 8ந்தேதி வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், 402 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. இதில் மக்களவையில் பணியாற்றும் ஊழியர்கள் 200 பேர், மாநிலங்களவையில் பணியாற்றும் ஊழியர்கள் 69 பேர் மற்றும் அவை தொடர்பான இதர அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 133 பேர் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் தொற்றை கண்டறியும் மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அரசு வழங்கியிருக்கும் வழிகாட்டும் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள சூழலில், பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
எனினும், கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.  இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.  கொரோனா பெருந்தொற்று காலத்தில் எம்.பி.க்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours