இரவு நேர ஊரடங்கில் கொரோனா நெறிமுறைகளை மீறியது தொடர்பாக சென்னையில் 5,113 வழக்குகள் பதிவு: ரூ.10,22,600 அபராதம் வசூல்..!

Estimated read time 1 min read

சென்னை:

நேற்று (10.01.2022) இரவு நேர முழு ஊரடங்கில், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக சென்னையில் 226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 517 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முகக்கவசம் அணியாதது தொடர்பாக 5,113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.10,22,600/- அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.28,000 அபராதமும் வசூலிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு 06.01.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரையில் இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமையன்று முழு நேர ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச்சேர்ந்த 10,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.

ஆகவே, நேற்று (10.01.2022) இரவு 10.00 மணி முதல் இன்று (11.01.2022) காலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்பேரில், நேற்று சென்னை பெருநகரில் சட்டம் – ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் 312 வாகனத் தணிக்கை சாவடிகள் மற்றும் ரோந்து பணிகள் மேற்கொண்டு, இரவு நேர ஊரடங்கில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 337 இருசக்கர வாகனங்கள், 26 ஆட்டோக்கள். 15 இலகுரக வாகனங்கள் மற்றும் 139 இதர வாகனங்கள் என மொத்தம் 517 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், நேற்று (10.01.2022) கொரோனா தடுப்பின் முக்கிய வழிகாட்டுதல் நெறிமுறையான முகக்கவசம் அணியாதது தொடர்பாக 5,113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.10,22,600/- அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 28,000/- அபராதமும் வசூலிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து காவல் ஆளிநர்கள் மேற்கொண்ட வாகனத் தணிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்பில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 12 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 2 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு சமயத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும்படி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours