ராமேசுவரம்:
ராமேசுவரம் ஆலயத்திற்கு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையால் ஆலயத்தை சுற்றி கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகரம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலும் ஒன்றாகும். இந்து மதத்தில் ராமேசுவரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.
குஜராத்தில், இந்தியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோமநாதர் ஆலயத்தைப் போலவே, தமிழகத்தில் இந்திய எல்லையில் அமைந்துள்ளது ராமேசுவரம் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
சோமநாதர் ஆலயம் பல நூற்றாண்டுகளாக, வெளிநாடுகளில் இருந்து பல்வேறு தாக்குதல்களை சந்தித்துள்ளது.
ஏற்கனவே ராமேசுவரம் கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகவே கோவிலின் நான்கு வாசல் பகுதிகளிலும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது ராமேசுவரம் கோவிலுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில், வழக்கத்தைவிட கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
குறிப்பாக கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு உள்ளிட்ட போலீசார் கூடுதலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகளால், பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் நிலவும் நிலையில், ராமேஸ்வரத்தில் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற உளவுத்துறையின் தகவல்கள் கவலைகளை அதிகரிக்கின்றன.
+ There are no comments
Add yours