Child sexual harassment : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் – டிஜிபி உத்தரவு!

Estimated read time 1 min read

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு காவல்துறை செல்ல வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என விசாரணை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வழிக்காட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளார். அதில் தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்ட 1098,181,100 ஆகிய உதவி எண்கள் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபர் நேரடியாகவோ, குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ மற்றும் சமூக நலத்துறை, தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் காவல் நிலையங்களுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்கக்கூடிய விசாரணை அதிகாரி சமூக நல பாதுகாப்பு துறையால் நிறுவப்பட்டுள்ள மன நல ஆலோசகர் ஒருவரை நியமிக்க கோரிக்கை வைத்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் உடனடியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் மூலமாக குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளை விசாரணை அதிகாரி உடனடியாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டுமெனவும், பாலியல் புகார் வந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று, பாதிக்கப்பட்ட குழந்தையை மீட்டு தாமதிக்காமல் மருத்துவ உதவி வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சொந்தங்களிடமிருந்து உடனடியாக எழுத்து புகார் பெற்று அவர்களுக்கு சி.எஸ்.ஆர் வழங்கப்பட வேண்டும் எனவும் குழந்தையின் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருப்பின் ஆலோசகர் ஒருவரை நியமித்து அவரை சாட்சியமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் விசாரணை நடத்தும் போது சந்தேக நபர்கள் உடன் இருக்கக்கூடாது எனவும் குழந்தைகள் தேர்வு செய்யும் இடத்தில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை அதிகாரி பாதிக்கப்பட்ட குழந்தையிடம் வாக்குமூலம் பெற வீட்டிற்கு செல்லும் போது வாகனத்தில் சைரனை பயன்படுத்த கூடாது எனவும் சாதாரண உடை அணிந்து வாக்குமூலம் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். விசாரணை நடத்தும் போது ஆலோசகர் உடனிருக்க வேண்டும்.  பாலியல் வன்கொடுமை மாதிரிகள் ஐந்து நாட்களுக்குள் சேகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் புகார்களில் முதல் தகவல் அறிக்கையை இறுதி செய்வதற்கு முன் பெற்றோர், ஆலோசகர், சொந்தங்களிடம் படித்து காண்பிக்க வேண்டும் எனவும் குற்றத்தை பற்றிய தகவல் கிடைத்தவுடன் 24 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதன் நகலை பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  பாலியல் புகார்களில் கைது செய்யும் போது முறையாக வாக்குமூலம் பெற்று டி.என்.ஏ மாதிரி சான்றிதழ் சேகரித்த பின்பு உடனடியாக நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன், காவல் கண்காணிப்பாளர்களிடம் உரிய அனுமதி பெற்று சமர்பிக்க வேண்டும் எனவும், பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் சாட்சியகங்களை பாதுகாக்க வேண்டும் என்பதால் அவர்களின் தொடர்பு விவரங்களை விசாரணை அதிகாரி மற்றும் காவல் நிலையத்தில் இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கி உள்ளார்.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours