CORONA 3rd WAVE : கொரோனா 3வது அலை பிப்ரவரி 1 முதல் 15ஆம் தேதிக்குள் உச்சமடையும்: சென்னை ஐஐடி கணிப்பு!!

Estimated read time 1 min read

சென்னை:

இந்தியாவில் கொரோனா 3வது அலை பிப்ரவரி 1 முதல் 15ஆம் தேதிக்குள் உச்சமடையும். கொரோனா பரவலைக் குறிக்கும் ஆர்-வேல்யு தற்போது 4 ஆக உயர்ந்துவிட்டது என்று சென்னை ஐஐடி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்-வேல்யு என்பது தொற்றுள்ள ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு பரவுகிறது என்பதைக் குறிக்கும். ஆர்-வேல்யு எண்ணில் 1க்கு குறைவாக இருந்தால்தான் கொரோனா பரவல் குறைவாக இருக்கிறது. 1 அல்லது அதிகமாகச் செல்லும்போது, கொரோனா பரவல் வேகம் அதிகரிக்கிறது. இந்தியாவின் ஆர்-வேல்யுவை அடிப்படையாக வைத்து சென்னை ஐஐடியின் கணிதத் துறை கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவில் கடந்த டிசம்பர் 25 முதல் டிசம்பர் 31-ம் தேதிவரை ஆர்-வேல்யு 2.9 என்ற வீதத்தில இருந்தது. ஆனால் 2022, ஜனவரி 1 முதல் 6-ம் தேதிவரை ஆர்-வேல்யு 4 என்ற அளவில் உயர்ந்துவிட்டது. ஆர்-வேல்யு அதிகரிக்கும்போது, கொரோனா பரவலும் அதிகரிக்கும்.

இதுகுறித்து சென்னை ஐஐடி கணிதத் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் ஜெயந்த் ஜா கூறுகையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைத்தல், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அதிகப்படுத்தும்போது மக்கள் ஒருவரோடு ஒருவர் சந்திப்பது குறையும், அப்போது ஆர்-வேல்யு குறையத் தொடங்கும். இல்லாவிட்டால் ஆர்-வேல்யு அதிகரிக்கத்தான் செய்யும். நாம் எவ்வாறு கட்டுப்பாடுடன் இருக்கிறோம், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது, கொரோனா தடுப்பு விதிகளை நாம் கடைபிடிப்பது ஆகியவற்றைப் பொறுத்து இந்த எண் மாறும். கொரோனா 2வது அலை உச்சமாக இருந்தபோதுகூட ஆர்-வேல்யு 1.69 புள்ளிக்கு மேல் செல்லவில்லை. ஆனால் தற்போது ஆர்-வேல்யு 2.69 ஆக அதிகரித்துள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், நாங்கள் கடந்த 2 வார புள்ளிவிவரங்கள் அடிப்படையில்தான் தெரிவித்துள்ளோம். இதன்படி கொரோனா 3வது அலை, அதாவது நாம் சந்தித்து வரும் இந்த அலை பிப்ரவரி 1ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் உச்சமடையக்கூடும், எதிர்பார்ப்புக்கு முன்கூட்டியே உச்சமடையவும் வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours