அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு நேரத்தில் காவல்துறையினர் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருக்கிறார்.
- அதில், “இரவு நேர பொதுமுடக்கம் மற்றும் ஞாயிறு பொதுமுடக்கத்தின் போது அத்தியாவசிய பணியாளர்களை அனுமதிக்க வேண்டும்.
- மத்திய மற்றும் மாநில அரசு, நீதித்துறை, உள்ளாட்சி, வங்கி, போக்குவரத்து துறை ஊழியர்களை அனுமதிக்க வேண்டும்.
- பால், வினியோகம், மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிக்கை வினியோகம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து சேவைகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்களில் பணிபுரிவோர் அடையாள அட்டையை பார்வையிட்டு உடனடியாக அனுமதிக்க வேண்டும்.
- ஜனவரி 9ஆம் தேதி முழு முடக்கத்தின்போது உணவு விநியோகிக்கும் மின்வணிக பணியாளர்களை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கலாம்.
- விவசாய பணிக்காக செல்வோர், அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணி முடிந்து சொந்த ஊர் செல்வோரை அனுமதிக்கலாம்.
- சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்படும் விவசாய விளை பொருட்கள் காய்கறி பழங்கள் கறிக்கோழிகள் முட்டை போன்ற வாகனங்கள் எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது.
- உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனப் பணியாளர்களின் அடையாள அட்டை காண்பித்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
- ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியாளர்கள் தேர்வாணையம், நிறுவனங்களின் நுழைவுத்தேர்வு மற்றும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர் அழைப்பு கடிதத்தை காட்டினால் அனுமதிக்க வேண்டும்.
- வாகனத்தை சோதனை செய்ய வேண்டியிருந்தால் கையுறை அணிந்திருக்க வேண்டும்.
- அடிக்கடி கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
- இரவு வாகன சோதனைகள் வெளிச்சம் உள்ள இடங்களில் நடத்தப்பட வேண்டும்.
- காவலர்கள் தடுப்பான்கள் அமைத்து ஒளிரும் மேல் சட்டை அணிந்து பாதுகாப்பாக இரவு நேரங்களில் பணியாற்ற வேண்டும்.
- வாகனச் சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours