கடலூர்;
கடலூர் மாவட்டம் திட்டக்குடிசிறுபாக்கம் அடுத்த கழுதூர் ஊராட்சியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கி, பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் பேசியதாவது:-
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து மக்களை அச்சுறுத்தியது. முதல்வர் ஸ்டாலின் பல கட்டுப்பாடுகளை விதித்து இந்தியளவில் அதிக தொற்று பாதிக்காத மாநிலமாக மாற்றினார். முதல்வராக ஸ்டாலின் பொற்றுபேற்ற 200 நாட்களில் 1,200 மக்கள் நலன் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார். 6 மாதங்கள் பெய்ய வேண்டிய மழையின் அளவை, 6 நாட்களில் பெய்தது. இதனால், சென்னை உட்பட பல நகரங்கள் மழையால் பாதித்தது.
அப்போது, திருச்சியிலிருந்து சென்னை சென்ற முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்லாமல், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும், உடனடி நடவடிக்கை எடுத்து வெள்ள பாதிப்புகளை கட்டுப்படுத்தினார். திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வளர்ச்சி திட்டப்பணிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சரின் மனைவி இறந்த பிறகு சொந்த கிராமமான கழுதூரில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால், அங்கு கூடியிருந்தவர்கள் மற்றும் உறவினர்களை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு அவர் கண் கலங்கினார். மனைவியை இழந்த துக்கத்தில் கண் கலங்கிய அமைச்சரை அருகில் இருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தியதை தொடர்ந்து, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.
+ There are no comments
Add yours