பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியும், கடற்கரை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியும் போலீஸார் அவரின் வங்கிக்கணக்கு, பாஸ்போர்ட்டை முடக்கியும் உள்ளனர்.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி வரை பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராஜேந்திர பாலாஜி.
அந்த முன் ஜாமீன் மனு, கடந்த டிசம்பர் 17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நாளில் தி.மு.க அரசைக் கண்டித்து விருதுநகரில் நடந்த அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி, தனது முன் ஜாமீன் மனு தள்ளுபடியானதை தெரிந்தவுடன் காரில் ஏறி தப்பி தலைமறைவானார்.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர், கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர், தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, பெங்களூர் என அவர் தப்பிச் சென்றதாக கூறப்படும் பகுதிகளில் இத் தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், அடிக்கடி தொடர்பில் இருந்தவர்கள் உட்பட சுமார் 600 செல்போன் எண்களை போலீஸாரின் சைபர் கிரைம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்து அவர் தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் குற்றப்பிரிவு போலீஸார், ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில் கடல் மார்க்கமாக தப்பிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக கடலோரக் கண்காணிப்பினையும் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி முதல் வேதாரண்யம் வரையில் அனைத்து மீனவ கிராமப் பகுதிகளிலும் கண்காணித்து வருகின்றனர். அத்துடன் இந்தியா, இலங்கை ஆகிய இரண்டு நாட்டுக் கடல் எல்லைகளில் கண்காணிப்பை அதிகரிக்க ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி கடல் பகுதிகளிலும் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் மற்றும் பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜிக்கு பிடி மேலும் இறுகுவதால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours