கொரோனா நிவாரணம் வழங்க தாமதம் செய்தால் மக்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள் – எடப்பாடி பழனிச்சாமி.,

Estimated read time 0 min read

சென்னை:

உச்சநீதிமன்ற ஆணைப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும், நிவாரண நிதியினை உடனடியாக வழங்க வேண்டும் என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நிவாரணம் வழங்க கால தாமதம் செய்தால், இறந்தவர்களின் குடும்பத்தினர் வீதியில் இறங்கி போராடுகின்ற சூழ்நிலை ஏற்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை வீசியதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த மே மாதத்தில் உயிரிழந்தனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே கால தாமதம் செய்யாமல் கொரோனாவால் மரணமடைந்தவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் வழியுறுத்தியுள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிதியம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் நிவாரணமாக 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிதியை வழங்குவதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்

மாநில அரசுகள், மத்திய அரசு ஒதுக்கும் நிதியோடு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பங்கையும் சேர்த்து கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2020 ஏப்ரல் முதல் நேற்று வரை சுமார் 36,700 பேர் இறந்துள்ளதாக தற்போதைய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நிவாரணம் வழங்க நடவடிக்கையில்லை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இறந்தவர்கள் அனைவரையும் கொரோனா நோய்த் தொற்றினால்தான் இறந்ததாகக் கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மேலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதைய முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

நீதிபதிகள் அதிருப்தி

உச்சநீதிமன்றமே 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட பின்பும், ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், இதுவரை இந்த அரசு நிவாரணம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்பந்தமான வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொரோனா நிவாரண நிதியை மாநில அரசுகள் வழங்காதது குறித்து நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கண்டிப்பான உத்தரவு

உடனடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அறியும் வகையில், தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில் இந்த நிவாரணத்தைப் பெறுவதற்கான முழு வழிமுறைகளோடு விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியினை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் இவ்வளவு கண்டிப்புடன் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட பின்பும், இந்த அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது, பாதிக்கப்பட்ட மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

வீதியில் இறங்கி போராட்டம்

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயை வழங்கக்கூட திமுக அரசுக்கு இயலவில்லை என்றால், அரசின் திறமையின்மையை, இந்த அரசின் முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற ஆணைப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும், நிவாரண நிதியினை உடனடியாக வழங்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். இனியும் கால தாமதம் செய்தால், இறந்தவர்களின் குடும்பத்தினர் வீதியில் இறங்கி போராடுகின்ற சூழ்நிலை ஏற்படும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours