எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டத்தால் ஒரு நாள் முன்பாகவே நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்தது: 10 மசோதாக்கள் மட்டுமே நிறைவேறியது.,

Estimated read time 1 min read

புதுடெல்லி:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், திட்டமிட்ட தேதிக்கு ஒருநாளுக்கு முன்பாக, முன்கூட்டியே நேற்று முடிக்கப்பட்டது. 12 எம்பிக்கள் சஸ்பெண்ட், லக்கிம்பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் செய்த தொடர் அமளி காரணமாக, கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கி, டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதோடு அன்றைய தினம், கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் விதிமீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்பிக்கள் குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய அனைத்து நாட்களிலும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரத்தால் மாநிலங்களவையில் கடும் அமளி நிலவியது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் அவை செயல்பட முடியாமல் முடங்கியது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தினமும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும்படி கோரியும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கின.

இந்நிலையில், நேற்று காலை மாநிலங்களவை கூடியதும், அவையை ஒருநாள் முன்கூட்டியே நிறைவு செய்வதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இக்கூட்டத் தொடரில் அவையின் செயல்திறன் மிகக் குறைந்த அளவில் இருப்பதை உறுப்பினர்களுக்கு சொல்லிக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. அவையில் கண்ணியம், ஒழுக்கம் பேணப்பட வேண்டும். என்ன தவறு நடந்தது என்பதை உறுப்பினர்கள் உணர வேண்டும். நாட்டின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மறையான சூழ்நிலையை நோக்கி நாம் அனைவரும் செயல்பட வேண்டும்,’’ என்றார்.

மேலும், வரவிருக்கும், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, மகர சங்கராந்தி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இதே போல, மக்களவை காலையில் கூடியதும், ஒருநாள் முன்பாக கூட்டத்தொடரை முடித்து, அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் உள்ளிட்டோர் நேற்று அவைக்கு வந்திருந்தனர். அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, சபாநாயகரை அவரது அறையில் அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர்.

குளிர்கால கூட்டத்தொடரில், விலைவாசி உயர்வு, லக்கிம்பூர் வன்முறை, 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக, 18 நாட்கள் நடந்த கூட்டத் தொடரில் 10 மசோதாக்கள் மட்டுமே இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இதில் வேளாண் சட்டங்கள் ரத்து, தேர்தல் சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் பெரிய அளவில் விவாதம் இன்றி அவசர, அவசரமாக எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

12 எம்பிக்களுடன் டெரிக் இணைந்தார்

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த எம்பி டெரிக் ஓ பிரையன், நேற்று முன்தினம் அவை விதிமுறை புத்தகத்தை கீழே தூக்கி போட்டதால் எஞ்சிய நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து நேற்று அவைக்கு வராத அவர், ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்களுடன் இணைந்து நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். சஸ்பெண்ட் எம்பிக்கள் போட்டி நாடாளுமன்றத்தை நடத்தினர்.

அவை செயல்பாடு

மக்களவையில் 83 மணி நேரம் 12 நிமிடங்கள் அலுவல் நடந்துள்ளது. இதில், 26.5 மணி நேரம் மட்டுமே மசோதா தொடர்பான விவாதங்கள் நடந்துள்ளன. அமளி காரணமாக, 18 மணி நேரம் 48 நிமிடங்கள் வீணானது. அவையின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் 82 சதவீதம் என சபாநாயகர் ஓம்பிர்லா கூறி உள்ளார். மாநிலங்களவை 45.4 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. இதில் 21.7 மணி நேரம் சட்டங்களை நிறைவேற்ற விவாதங்கள் நடந்துள்ளன. அவையின் உற்பத்தி திறன் 48 சதவீதமாகும்.

ஜீரணிக்க முடியவில்லை

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அளித்த பேட்டியில், ‘‘அவையில் அமளியை உருவாக்கி, செயல்படவிடாமல் எதிர்க்கட்சிகள் செய்தது செயல் துரதிருஷ்டவசமானது. இதைப் பார்க்கும் போது, 2019 மக்களவை தேர்லில் பாஜ கூட்டணிக்கு மக்கள் அளித்த அமோக வெற்றியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை என்பது தெரிகிறது’’ என்றார்.

 

குளிர்கால கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை:

* தேர்தல் சட்ட திருத்த மசோதா
* 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா
* வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா
* அணை பாதுகாப்பு மசோதா
* போதை மருந்து தடுப்பு சட்ட திருத்த மசோதா
* சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குனர்கள் பதவி நீட்டிப்பு மசோதா
* உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மசோதா
* ஒன்றிய புலனாய்வு ஆணைய திருத்த மசோதா
* உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சம்பள மசோதா
* தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி சட்ட திருத்த மசோதா
இதுதவிர, குழந்தை திருமண சட்ட திருத்த மசோதா, மத்தியஸ்தம் மசோதா, சிஏ சட்ட திருத்த மசோதா, உயிரியல் பன்முகத்தன்மை திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் வெறும் 2 நிமிடமும், மாநிலங்களவையில் 8 நிமிடமும் விவாதம் நடத்தி நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours