சாலை வசதி ஏற்படுத்துவது குறித்து ஏற்காடு மலைப்பாதையில் நடந்து சென்று கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை, மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் சேலம் மண்டல வனபாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அதிகாரி கவுதம், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) செல்வம், உதவி கலெக்டர்கள் விஷ்ணுவர்த்தினி (சேலம்), சரண்யா (ஆத்தூர்), மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன், உதவி வன பாதுகாவலர் (வன விரிவாக்கம்) கண்ணன் மற்றும் அதிகாரிகள் ஏற்காடு 60 அடி பாலத்தில் இருந்து குண்டூர் வரை சாலை வசதி ஏற்படுத்துவது குறித்து மலைப்பாதையில் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மலைவாழ் மக்களிடம் கலெக்டர் கார்மேகம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து குண்டூர் அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளிக்கு கலெக்டர் கார்மேகம் சென்று மாணவ, மாணவிகளிடம் பேசினார்.
அதைத்தொடர்ந்து அவர் படகு இல்லத்துக்கு சென்றார். அப்போது அங்கு அனுமதியின்றி சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு பொருட்கள் லாரியில் ஏற்றப்பட்டன. இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது: ஏற்காட்டுக்கு வார இறுதி நாட்களில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். எனவே படகு இல்லம் மேம்படுத்துதல், ஏரிகளின் கழிவுநீர் வெளியேற்றம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கோடை விழா நடத்துவது போன்று குளிர்காலத்திலும் ஒரு விழா நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பரிசீலனை செய்யப்படும்.
மேலும் டேனிஷ்பேட்டை வழியாக ஏற்காடு செல்வது குறித்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூருவில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் சேலம் நகருக்குள் நுழையாமல் நேரடியாக ஏற்காடு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஏற்காடு ரோஜா பூங்காவில் புதிய மரங்களை வளர்க்க பாரம்பரிய விதைகளை கொண்ட விதை பந்துகளை வீசி எறியும் நிகழ்ச்சி நடந்து. இதையடுத்து அண்ணா பூங்காவில் பாரம்பரிய மலைப்பயிர்கள், காய்கறிகள் பயிரிடுவது குறித்து கலெக்டர் கார்மேகம் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
+ There are no comments
Add yours