சென்னை:
கடவுள் நம்பிக்கை வரிகளை சிதைக்காமல் முழுமையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதுடன், தமிழ்தாய் வாழ்த்துப் பாடும் போது இனி அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து அரசாணையையும் வெளியிட்டுள்ளார். அதேபோல, மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் எழுதிய “நீராருங் கடலுடுத்த” என்ற பாடல் 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் மூன்றாம் நடையில் பாடப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது, எழுந்து நிற்பதில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வானதி சீனிவாசன்
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பெரும்பாலான கட்சிகள் கருத்து சொல்லவில்லை.. ஆனால், பாஜக மட்டும் இதை வரவேற்றுள்ளதுடன், கூடவே ஒருசில கோரிக்கைகளையும் வைத்து வருகிறது… அந்த வகையில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், “தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தமிழக அரசின் ஆணையை மகிழ்வுடன் வரவேற்கிறேன். தமிழறிஞர் மனோண்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய முழுப் பாடலையும் பாடமுதல்வர் ஸ்டாலின் உத்தரவிடவேண்டும்.. இதயப்பகுதியை வெட்டி எறிந்த வரலாறு சரி செய்யப்படவேண்டும்.” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து
அதேபோல, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஒரு கோரிக்கை விடுத்து, அதை அறிக்கையாகவே வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: தமிழ்த் தாய் வாழ்த்தினை அரசின் மாநில பாடலாக அங்கீகரித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையை பா.ஜ.க. மிகவும் வரவேற்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் வாழ்த்துப் பாடலாக அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய நீராடும் கடலுடுத்த என்னும் பாடல் பாடப்பட வேண்டும் என்னும் கோரிக்கை 1931ம் ஆண்டைய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கை தீர்மானமாக இடம் பெற்றது.
பாடல்
தொடர்ந்து கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் இப்பாடலை வாழ்த்துப் பாடலாக பாடி வந்தார்கள். ஆனால் அப்பாடல் முழுமையான பாடலாக இருந்தது. இதனை தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சராக இருந்த அண்ணாதுரைக்கு கரந்தை தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொகும் என்ற பாடலை 1970ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிவித்து அரசாணை வெளியிட்டார்.
சர்ச்சை
அப்போதே அப்பாடலை முழுமையாக பயன்படுத்தாமல் அதில் சில வரிகளை தவிர்த்தது சர்ச்சையானது. மனோன்மணியம் சுந்தரனார் இருந்திருந்தால், தாம் எழுதிய இப்பாடலுக்கு கிடைத்த மாநில அரசின் அங்கீகாரத்தை நினைத்து பெரிதும் மகிழ்ந்திருப்பார். ஆனால் அப்பாடலை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தாமல் அதில் சில வரிகளை நீக்கி திருத்திப் பயன்படுத்துவதை கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.
அரைகுறை
சுந்தரனார் எழுதிய கவிதை வரிகளை சிதைக்காது முழுமையான பாடல் வரிகளை பயன்படுத்துவதே சுந்தரனாருக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும். ஆகவே தமிழக முதலமைச்சர் தமிழ் மீது நல்லெண்ணம் கொண்டு செய்த முயற்சியை அரைகுறையாக செயல்படுத்தாமல், அவர் பதவி ஏற்கும் போது எடுத்துக் கொண்ட உறுதிமொழியின் படி, கடவுள் நம்பிக்கை வரிகளை சிதைக்காமல் முழுமையாக பாடலை பயன்படுத்துவதே கரந்தை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமா மகேசுவரனாருக்கு பெருமை சேர்ப்பதாக அமையும். இதை தாங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
-Hemavandhana
+ There are no comments
Add yours